மார்க்கெட்டில் மந்த நிலை நிலவும் சமயத்திலும் விற்பனையில் அசத்தும் டிவிஎஸ்.. வளர்ச்சி சதவீதம் இதுதான்
மார்க்கெட்டில் மந்த நிலை நிலவி வரும் சமயத்திலும் கூட, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி விற்பனையில் அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து மே மாதம் பிறந்துள்ளது. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதத்தில், கார் மற்றும் டூவீலர் உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை செயல்பாடு தொடர்பான சேல்ஸ் ரிப்போர்ட் வரிசையாக வெளியாகி வருகிறது.

இந்த வரிசையில், இந்தியாவை சேர்ந்த முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ஓரளவிற்கு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மொத்தம் 3.05 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2.93 லட்சம் மட்டுமே.

இதன்மூலம் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 1.43 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டிவிஎஸ் நிறுவனம் வெறும் 1.31 லட்சம் மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன்மூலம் டிவிஎஸ் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் பிரிவு, விற்பனையில் 9 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

அதே நேரத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனையும் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 89,245 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 97,323 ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலமாக டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் பிரிவும் விற்பனையில் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கார், டூவீலர் உள்ளிட்ட வாகன மார்க்கெட்களில் மந்த நிலை நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட, கடந்த சில மாதங்களாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி விற்பனையில் நல்ல வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்எல்100, அப்பாச்சி சீரிஸ் மற்றும் என்டார்க் 125 ஆகியவை விற்பனை வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications








