டிவிஎஸ் ரேடியான் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
டிவிஎஸ் ரேடியான் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் சிறப்புகள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டில் 2 லட்சம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும், கம்யூட்டர் எனப்படும் சாதாரண வகையில் இந்த ஆண்டின் சிறந்த பைக் விருதை ரேடியான் பெற்றிருக்கிறது. இவற்றை கொண்டாடும் விதமாக, இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிசன் மாடலானது க்ரோம் - பிளாக் மற்றும் க்ரோ- பிரவுன் என்ற இரண்டு புதிய விசேஷ வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது.

இந்த பைக்கின் சைடு மிரர்கள், கார்புரேட்டர் கவர் ஆகியவற்றில் க்ரோம் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டேங்கில் புதிய தை பேடு, சொகுசான இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் முன்சக்கரத்திற்கான டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கில் 109.7 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக் லிட்டருக்கு 69.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 10 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஸ்பெஷல் எடிசன் ரேடியான் பைக் இரண்டு புதிய வண்ணக் கலவையில் வந்தாலும், சாதாரண ரேடியான் பைக் வழக்கம்போல் பியர்ல் ஒயிட், மெட்டல் பிளாக், கோல்டன் பீஜ், ராயல் பர்ப்புள், வல்கானோ ரெட் மற்றும் டைட்டானியம் க்ரே ஆகிய 6 வண்ணத் தேர்வுகளில் தொடர்ந்து கிடைக்கும்.

புதிய டிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிசன் பைக் மாடலுக்ககு ரூ.54,665 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் புதிய 110 சிசி பைக் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இது தனித்துவமான தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications








