சேல்ஸ் ரிப்போர்ட்... கடந்த மே மாதம் டிவிஎஸ் விற்பனை செய்த டூவீலர்களின் எண்ணிக்கை இதுதான்...
2019ம் ஆண்டு மே மாதத்திற்கான டிவிஎஸ் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ், கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்திற்கான தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த மே மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2,94,326 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,98,135ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விற்பனை என எடுத்து கொண்டால், டிவிஎஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2,36,807 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 2,46,231 யூனிட்களை விற்பனை செய்திருந்தது.

அதே சமயம் டிவிஎஸ் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 13 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,42,787 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் 1,26,711 ஆக மட்டுமே இருந்தது.

அதேபோல் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனையும் 2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 95,879 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை 2019ம் ஆண்டு மே மாதத்தில், 98,202 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி என எடுத்து கொண்டால், டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் ஒட்டுமொத்தமாக 57,519 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் 51,904ஆக மட்டுமே இருந்தது.

இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனத்தின் இரு சக்கர வாகன ஏற்றுமதி 11 சதவீதம் என்கிற அளவிற்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது. முன்னதாக அப்டேட் செய்யப்பட்ட 2019 மாடல் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை டிவிஎஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்டேட் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியை சேர்த்துள்ளது. இதுவே இந்த பைக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








