டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் அறிமுகம் எப்போது?
கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஸெப்லின் என்ற க்ரூஸர் ரக பைக் மாடலை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. வித்தியாசமான டிசைன், அசத்தலான தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருந்த இந்த பைக் பார்வையாளர்களையும், ஆட்டோமொபைல் பிரியர்களையும் வெகுவாக ஈர்த்தது.

இந்த நிலையில், இந்த புதிய பைக்கின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டிவிஎஸ் ஸெப்லின் பைக்கின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸெப்லின் பைக்கின் மிக முக்கிய விஷயம், க்ரூஸர் பைக் என்பதுடன், இந்த பைக்கில் ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதும் அனைவரின் ஆவலைத் தூண்டியதற்கு காரணம். அப்பாச்சி 200 பைக்கில் பயன்படுத்தப்படும் 197 சிசி எஞ்சின் கூடுதல் சிசி திறனுடன் போர் செய்யப்பட்டு, இந்த பைக்கில் 212 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்சினுடன் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டரும் இணைந்து செயல்படும். இந்த ஸ்டார்ட்டர் ஜெனரேட்டருக்கு டிவிஎஸ் காப்புரிமை பெற்றுள்ளது.இதனால், தேவைப்படும் சமயங்களில் கூடுதல் திறனை இந்த ஐஎஸ்ஜி எனப்படும் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மூலமாக பெற முடியும்.

ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக இந்த பைக் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லதாக இருக்கும். ஸெப்லின் பைக்கில் 48V லித்தியம் அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெல்ட் டிரைவ் மூலமாக பின்சக்கரத்திற்கு எஞ்சின் சக்தி கடத்தப்படும்.

புதிய டிவிஎஸ் ஸெப்லின் பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் களஸ்ட்டர், புளூடூத் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக பல்வேறு தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்தும் வசதியும் அளிக்கப்படும்.

இந்த பைக்கின் கான்செப்ட் மாடலில் ஸ்மார்ட் பயோ கீ, ஹெட்லைட் க்ளஸ்ட்டர் எச்டி கேமரா ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால், தயாரிப்பு நிலை மாடலில் விலையை குறைவாக நிர்ணயிக்கும் நோக்கில், இந்த தொழில்நுட்பங்கள் இடம்பெறாது என்று தெரிகிறது.

வடிவமைப்பில் இந்த பைக் தனித்துவமாகவும், தரமான பாகங்களுடன் உருவாக்கப்பட்டு இருப்பதால் மிகவும் பிரிமீயம் தோற்றத்துடன், சந்தையில் வசீகரமான தோற்றம் கொண்ட க்ரூஸர் பைக் மாடலாகவும் வரும் என்று தெரிகிறது.

புதிய டிவிஎஸ் ஸெப்லின் பைக்கிற்கு ரூ.1.15 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுஸுகி இன்ட்ரூடெர் 150, பஜாஜ் அவென்ஜர் உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டியிடும் வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை இல்லை.
Source: Bikewale


Click it and Unblock the Notifications








