புதிய ஆக்டிவாவின் புது ஸ்டைல்: வைரலாகும் மாதிரி புகைப்படம்!
ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடலாக இருக்கும் ஆக்டிவா ஸ்கூட்டரின் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷன் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும், தற்போதைய சூழலில் ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில், நடப்பாண்டின் மார்ச் மாத மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில், அதிகம் விற்பனையாகும் ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கை விற்பனையில் வீழ்த்தி, முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இதுபோன்ற காரணத்தால், ஹோண்டா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை, எப்போதும் அதன் வசமே தக்க வைத்துக் கொள்ளும் விதமாக அவ்வப்போது ஆக்டிவா ஸ்கூட்டரில் அப்கிரேட் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது. அவ்வாறு, புதிதாக அப்கிரேட் செய்யப்பட்டு வரும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் மாதிரி புகைப்படம் ஒன்றை இந்தியன் ஆட்டோ பிளாக்ஸ் என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் கடைசியாக அதன் ஆக்டிவா 5ஜி மாடலை கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, தற்போது புதிய வெர்ஷன் ஆக்டிவாவை இந்தியாவில் களமிறக்குவதற்கு அந்த நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அவ்வாறு, சந்தையில் புதிதாக களமிறக்கப்பட இருக்கும் ஆக்டிவா, பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜினைப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், தயாரிப்பு நிலையில் இருக்கும் ஆக்டிவா 6ஜி மாடலை, அந்த நிறுவனம் அவ்வப்போது இந்தியச் சாலையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தும் காட்சிகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில்தான், புதிய பிஎஸ்6 தரத்திலான ஆக்டிவா 6ஜி குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதேசமயம், தற்போது வைரலாகும் புகைப்படங்கள், ஹோண்டா நிறுவனத்தின்மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர், ஸ்டைலில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது தவிர மேலும் சில வசதிகளும் இந்த ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் சேர்க்கப்பட உள்ளன. தற்போது உள்ள 109 சிசி எஞ்ஜின்தான் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

அதேசமயம், அடுத்த வருடம் அமலாக இருக்கின்ற பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்பவும் இந்த எஞ்ஜின் அப்டேட் செய்யப்படும். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து வெளிவரவில்லை. இருப்பினும் நடப்பாண்டின் மத்தியில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரீமியம் வசதி மற்றும் பிஎஸ்-6 எஞ்ஜின் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் சற்று விலை உயர்வைப் பெறலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு, ரூ. 56 ஆயிரம் முதல் ரூ.58 ஆயிரம் வரையிலான எக்ஸ் ஷோரூமில் விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் 109 சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்படவுள்ளது. இது, 8 பிஎச்பி பவரை 7,500 ஆர்பிஎம்மிலும், 9 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications








