150சிசி பைக்குகளைவிட அதிக சக்தி வாய்ந்த ஏரோக்ஸ்: யமஹாவின் புதிய ஸ்கூட்டர்!
இந்தியாவில் தற்போது விற்பனையாகும் 150சிசி மோட்டார்சைக்கிள்களைவிட அதிக சக்தி வாய்ந்த ஏரோக்ஸ் என்ற புதிய மாடல் ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை பாங்காக்கில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான சர்வதேச வாகன கண்காட்சியில் யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 2019ம் ஆண்டிற்கான சர்வதேச வாகன கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புத்தம் புதிய மாடல் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் யமஹா நிறுவனம் தனது புத்தம் புதிய ஏரோக்ஸ் எனப்படும் 155சிசி என்விஎக்ஸ்155 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

இந்த ஏரோக்ஸ் ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை மலேசியாவில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதமே யமஹா நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. தொடர்ந்து, மலேஷியாவைத் தவிர, இந்த குறிப்பிட்ட ஸ்கூட்டர் இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, இந்த சக்தி வாயந்த என்விஎக்ஸ்155 ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் பாங்காக்கில் அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து, இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே இந்தியாவில் வந்துவிட்டதாக சில மாதங்களுக்கு தகவல்கள் பரவின. ஆனால், இதனை மறுத்த யமஹா, அது வதந்தி என முற்றுப் புள்ளி வைத்தது.

யமஹாவின் தயாரிப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் பிரீமியம் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு இதில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களே சாட்சி. அந்த வகையில், இந்த ஏரோக்ஸ் ஸ்கூட்டரில் 5.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும், எல்இடி ஹெட்லேம்ப், மொபைல் சார்ஜர் மற்றும் கார்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஸ்மார்ட் கீ சிஸ்டமும் இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, இருக்கையை திறக்க மற்றும் பெட்ரோல் டேங்கை திறக்க உதவுகிறது.

இதைத்தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரில் 14 இன்ச் கொண்ட முன் பக்கம் மற்றும் பின் பக்க வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் முன் பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்க சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் வாகன ஓட்டியின் பாதுகாப்பிற்காக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரின் தரை இடைவெளியானது 142mm-ஆக உள்ளது. அதேபோன்று, சீட்டிற்கும் தரைக்கும் இடையே 790mm இடைவெளி இருக்கின்றது. மேலும், யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் 155சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர், வாட்டர் கூல்ட், எஸ்.ஓ.எச்.சி., ப்ளூ கோர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.8 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 13.8 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்-இல் வெளியிடும்.

இந்த ஸ்கூட்டரில் ஒய்இசட்எப்-ஆர்15 வி3-இல் உள்ளதைப் போல வேரியபில் வால்வ் ஆக்டுவேஷன் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது, எஞ்ஜினின் அனைத்து விதமான இயக்க தன்மையிலும், ஸ்கூட்டரை பேலன்ஸாக வைத்துக்கொள்ள உதவும். இதன்படி, பார்ப்போம் என்றால் இந்த ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரானது இந்தியாவில் விற்பனையாகும் மற்ற 150 மோட்டார்சைக்கிளைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தது என தெரியவருகிறது.

இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான எந்த அறிகுறியும் இதுவரை யமஹா தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்பது இந்திய வாகன விரும்பிகளுக்கான ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் கூடிய விரைவில் இந்திய சாலைகளை இந்த ஸ்கூட்டர் கலக்க வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








