யமஹா எம்டி15 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு எப்போது? - புதிய தகவல்கள்!
யமஹா எம்டி15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

யமஹா நிறுவனத்தின் புதிய ஃபஸினோ, இசட்ஆர் மற்றும் எம்டி15 உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில், யமஹா ஃபஸினோ ஸ்கூட்டர் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 125 சிசி எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால், இசட்ஆர் மற்றும் எம்டி15 ஆகிய மாடல்களின் விலை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில், யமஹா எம்டி15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு எப்போது கொண்டு வரப்படுகிறது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி, வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த பிஎஸ்-6 மாடல் முறைப்படி சந்தைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

யமஹா ஆர்15 பைக்கின் பிஎஸ்-6 மாடலில் இருக்கும் அதே எஞ்சின்தான் புதிய யமஹா எம்டி15 பைக்கிலும் இடம்பெறுகிறது. இந்த 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 18.6 பிஎஸ் பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். பழைய மாடலைவிட சற்றே பவர் குறைவாக இருக்கும்.

இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகிய சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த கியர்பாக்ஸ் வர இருக்கிறது.

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றிருக்கும். எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இதர முக்கிய அம்சங்களாக தெரிவிக்கலாம்.

இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி கொடுக்கப்பட்டு இருக்கும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இந்த மாடலில் கொடுக்கப்பட்டு இருக்கும். சைடு ஸ்டான்டில் நிற்கும்போது எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாத வசதியும் இடம்பெற்றிருக்கும்.

புதிய யமஹா எம்டி15 பைக்கின் பிஎஸ்-6 மாடலுடன் சேர்த்து ரே இசட்ஆர் 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் மாடல்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-4 மாடல் ரூ.4,000 கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Bikewale


Click it and Unblock the Notifications








