யமஹா எம்டி-15 பைக்கை புக்கிங் செய்தால் உடனடி டெலிவிரி!
யமஹா எம்டி-15 பைக்கை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிலிரி கொடுக்கும் பணிகள் துவங்கி இருக்கின்றன. மேலும், முன்பதிவு செய்தால் உடனடியாக டெலிவிரி பெறும் வாய்ப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக் மாடலான யமஹா ஆர்-15 அடிப்படையில் உருவாக்கப்பட்ட நேக்கட் வெர்ஷன்தான் எம்டி-15 பைக். அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

யமஹா ஆர்-15 பைக்கின் எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை இந்த பைக் பங்கிட்டு கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களும் நம்பமாக இந்த பைக்கை முன்பதிவு செய்தனர். இந்த நிலையில், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தற்போது இந்த பைக்கை டெலிவிரி பெற துவங்கி இருக்கின்றனர்.

முழுவதுமாக பணத்தை கட்டி முன்பதிவு செய்தவர்களுக்கு மறுநாளே டெலிவிரி கொடுக்கப்படுகிறது. கடன் திட்டத்தில் வாங்குபவர்களுக்கு மட்டும், வங்கியிடம் இருந்து அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்கும் சூழல் இருக்கிறது. எனினும், ஒரு வாரத்திற்குள்ளாக இந்த பைக்கை டெலிவிரி பெற்றுவிட முடிவதாக தகவல்கள் கூறுகின்றன.

யமஹா எம்டி-15 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

யமஹா எம்டி-15 பைக்கின் எஞ்சின் நடுத்தர இயக்கத்தில் சிறப்பான திறனை வெளிக்கொணரும் விதத்தில், ட்யூனிங்கில் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த மாடலில் ஸ்லிப்பர் க்ள்ட்ச் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் 11 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 155 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர்களும் பொாருத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று, முன்சக்கரத்தில் 282 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. எம்ஆர்ஃப் நைலோக்ரிப் ஸாப்பர் எஃப்எக்ஸ்1 டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய யமஹா எம்டி-15 பைக் டார்க் மேட் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. ரூ.1.36 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நேக்கட் ஸ்ட்ரீட் ரக மாடல்களுடன் போட்டி போடுகிறது.
Source:AutoCarIndia


Click it and Unblock the Notifications








