யமஹா புதிதாக வடிவமைக்கும் பைக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா..? தீவிரமாக உருமாறும் டெனெர் 700..!
யமஹா நிறுவனம் அதன் டெனெர் 700 மாடலை அட்வென்சர் ரகத்திற்கு அப்கிரேட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான யமஹா, இளைஞர்களை குறிவைத்தே அதன் ஒவ்வொரு பைக்குகளையும் களமிறக்கி வருகின்றது.
இந்நிலையில், யமஹா நிறுவனம் அதன் டெனெர் 700 என்ற மாடலை அட்வென்சர் ரகத்திற்கு உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்வென்சர் ரக பைக் பிரியர்களை கவரும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால், டெனெர் மாடலில் இருவிதமான தேர்வு கிடைக்க உள்ளது.

மேலும், புத்தம் புது ஸ்டைலில் காட்சியளிக்க உள்ள இந்த பைக் நடுத்தர எடைக் கொண்ட அட்வென்சர் ரகமாக களமிறக்கப்பட இருக்கின்றது. இதுகுறித்த தகவலை உறுதி செய்யும் வகையில், அந்த பைக்கின் உற்பத்தி குழு தலைவராக உள்ள தகுஷிரோ ஷிரைஷி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"அண்மைக் காலங்களாக அட்வென்சர் ரக பைக்குகளுக்கு கிடைத்து வரும் அதீத வரவேற்பை அடுத்தே இந்த நடவடிக்கையில் களமிறங்கியிருப்பதாக" அவர் தெரிவித்தார்.

தற்போது வெளிநாடுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் இந்த டெனெர் 700 மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. மேலும், இதே பிராண்டில் அட்வென்சர் ரக மாடலுக்கான கோரிக்கையும் வாடிக்கையாளர்கள் தரப்பிலிருந்து எழும்பிய வண்ணம் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
இதுபோன்ற காரணங்களினாலயே, டெனெர் 700 மடாலை அட்வென்சர் ரகத்திற்கு மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள டெனெர் 700 மாடலில் பெரிய அளவிலான ப்யூவல் டேங்க் இடம்பெற இருக்கின்றது. இத்துடன், அதன் சஸ்பென்ஷன் மற்றும் உடல்வாகு உள்ளிட்டவையும் அட்வென்சர் தரத்திற்கு ஏற்பவாறு அப்கிரேட் பெற உள்ளது.

ஆனால், இந்த அட்வென்சர் டெனெர் 700 மாடலில் டிராக்சன் கன்ட்ரோல் இடம்பெற வாய்ப்பில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த பாதுகாப்பு அம்சம் இல்லாத டெனெர் சற்றே எக்ஸ்ட்ரீம் வெர்ஷனாக மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

துரதிர்ஷ்டவசமாக, யமஹா நிறுவனம் இந்த பைக்கை இந்தியாவில் களமிறக்குவதில் கவனம் செலுத்தவில்லை. ஆகையால், இந்த பைக்கின் இந்திய வருகை என்பது கேள்விக் குறியாக உள்ளது. மாறாக, தற்போது விற்பனையில் இருக்கும் இருசக்கர வாகனங்களை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் பணியை அது மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், புதிய பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் கொண்ட யமஹா ஆர்15 மாடல் பைக்கை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த பைக் தற்போதைய பிஎஸ்-4 மாடலைக்காட்டிலும் ரூ. 4, 000 என்ற அதிக விலையில் களமிறக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பிஎஸ்-6 தரத்திலான யமஹா ஆர்15 வி3.0 பைக் ரூ.1.46 லட்சம் என்ற விலை விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இது, எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

இந்த விலையுயர்விற்கு புதிய பிஎஸ்-6 தரம் கொண்ட எஞ்ஜின் அப்கிரேஷனே முக்கிய காரணமாக உள்ளது. இதுதவிர பெரியளவில் வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தொடர்ந்து, புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கிற்கு நாடு முழுவதும் உள்ள டீலர்கள் முன்பதிவை தொடங்கியுள்ளனர். முன் பதிவு செய்தவற்களுக்கு இம்மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து பைக் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








