துடிப்பான வயதில் பிரம்மிக்கும் செயலை செய்த இளைஞர்: அவர் பாராட்டு மழையில் நனைய காரணம் இதுதான்!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அவரின் ஆக்கப்பூர்வமான சிந்தனையை வித்தியாசமாகப் பயன்படுத்தியதன் காரணமாக, தற்போது இணையத்தின் ஸ்டாராக பிரபலமடைந்து வருகிறார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் எந்த அளவிற்கு வாகனம் பெருக்கமடைந்து வருகின்றதோ, அந்த அளவிற்கு அவைகளால் ஏற்படும் பின் விளைவுகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகள், மிகப் பெரிய தலை வலியாக, போக்குவரத்து துறைக்கு மாறியுள்ளது. இதனைத் தவிர்க்க பல்வேறு சட்டங்களும், போக்குவரத்து விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

இதற்கு வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற செயலே முக்கிய காரணமாக இருக்கின்றது. அரசு உட்பட சில தனியார் என்ஜிஓ அமைப்புகள் வாகன விபத்து குறித்தும், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்வுகளை சாலைகளில், வாகன ஓட்டிகளின் மத்தியில் செய்து வருகின்றனர். இருப்பினும், வாகன ஓட்டிகள் அவர்களின் போக்கிலேயே சென்று, விதிமுறை மீறல்களில் ஈடுபடுகின்றனர். அதேசமயம், அதற்கான பலனையும் உடனுக்குடன் அனுபவிக்கவும் செய்கின்றனர்.

பெரும்பாலும், குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது, அதி வேகத்தில் வானத்தை இயக்குவது, செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்குவது மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட காரணங்களாலே அதிகளவில் விபத்தும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற, விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், புகைப்படத்தின் விழிப்புணர்வைச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

19 வயதான ஹபிஸ் சஜீவ் தான் அந்த இளைஞர். இவர், கேரளத்தின் கொச்சின் பகுதியில் வசித்து வருகின்றார். இவர் ஓவியங்கள் மற்றும் வரைபடம் வரைவதில் கை தேர்ந்தவராவார். இவர், சாலை விபத்து குறித்த விழிப்புணர்வை புதுமையான வழியில் பரப்பும் பொருட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

அந்தவகையில், வாகன ஓட்டிகள் மேற்கொள்ளும் சிறு தவறுகூட, சில நாழிகையில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையிலான புகைப்படங்களை அவரது கேமிரா மூலம் தத்ரூபமாக எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை த்ரிகண்ணன் (மூன்றாவது கண்) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.

ஹபிஸ் எடுத்த இந்த புகைப்படமானது தத்ரூபமாக விபத்தின்போது எடுத்ததைப் போன்று அமைந்திருப்பதால், இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அவர் இதுவரை இரண்டு புகைப்படங்களை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், ஒன்று இளைஞரின் பின்னால் அமர்ந்து ஓர் பெண் செல்வதைப் போன்றும், அவர் வாகனத்தில் கீழே விழுவதைப்போன்று காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றது.

குறிப்பாக இந்த விபத்தானது, அப்பெண் அணிந்து வந்த துப்பட்டா வீலில் சிக்கியதால் ஏற்படுவதை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் உடலை மறைக்கும் விதமாக அணியும் துப்பட்டா கூட சில நேரங்களில், அவர்களின் இனிமையான பயணத்தை சோகமானதாக மாற்றிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

ஆகையால், பெண்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் முன்பாக, அவர்களது ஆடைகள்மீது அதிகம் கவனம் கொள்ள வேண்டும். அவ்வாறு, துப்பட்ட மற்றும் முந்தானை உள்ளிட்ட பகுதிகளை காற்றில் பறக்காத வண்ணம் கட்டிச் சென்றால், இனிமையான பயணத்தை உருவாக்கி தரும், என்பதே இந்த புகைப்படத்தின் நோக்கமாகும்.

மற்றுமொரு புகைப்படமானது, பலரின் வாழ்க்கையில் நடைபெற்றிருக்க கூடிய, அல்லது சந்தித்திருக்கக் கூடிய ஓர் சம்பவம். காரில் பயணிப்பவர்கள், திடீரென காரை நிறுத்திவிட்டு பின் பக்கம் வாகனம் வருகிறதா இல்லையா என்பதைக் கூட பார்க்காமல் கார் கதவை திறப்பதனால் ஏற்படக்கூடிய விபத்தை விளக்கும் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இந்த புகைப்படமும், ஓர் உண்மையான சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் போன்றே இருக்கின்றது. பெரும்பாலான நபர்கள் காரில் செல்லும்போது, வாகனங்கள் அதிகம் வரும் பக்கத்தில், கதவை உடனேத் திறப்பதால் நடைபெறும் இந்த விபத்தானது, பலரின் உயிரை பறிக்க முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆகையால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிப்பவர்கள் செய்யும் தவறால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படலாம். இதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனை விளக்கும் வகையிலேயே ஹபிஸின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் அவரது பேஸ்புக் பக்கம் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், அதிகளவு இணையதள வாசிகளால் அது பகிரப்பட்டு, பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








