மின்சார ஸ்கூட்டருக்கான குத்தகை திட்டம் அறிமுகம்! இஎம்ஐ-யை விட மிக குறைந்த கட்டணம்... ஆம்பியர் அதிரடி
ஆம்பியர் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டர்களை குத்தகைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய வாகனங்களின் விற்பனையைப் போலவே அவற்றை வாடகை மற்றும் குத்தகைக்கு விடும் கலாச்சாரம் அண்மைக் காலங்களாக இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி நிறுவனம் கூட கையிலெடுத்துள்ளது.

வாகன விற்பனை வீழ்ச்சியைச் சமாளிக்கும் விதமாகவே இந்த யுக்தியை மாருதி கையாளத் தொடங்கியுள்ளது. இதேபோன்று, ஃபோக்ஸ்வேகன், எம்ஜி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் கார் வாடகை மற்றும் குத்தகை திட்டத்தில் களமிறங்கியிருக்கின்றன.

இதைத்தொடர்ந்து, கூடுதலாக சில நிறுவனங்களும் தங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் வாகன குத்தகை திட்டத்தை கையிலெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. இதேபாணியை, சில மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் கையாளத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் களமிறக்கி வரும் ஆம்பியர் நிறுவனமே இந்த திட்டம்குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதற்காக ஓடிஓ கேபிடல் எனும் நிறுவனத்துடன் அந்நிறுவனம் இணைந்திருக்கின்றது.

இந்நிறுவனத்துடன் இணைந்தே இந்தியாவில் இருசக்கர மின்சார வாகனத்தை வாடகை மற்றும் குத்தகை திட்டத்தின் அடிப்படையில் வழங்க இருக்கின்றது. இந்த திட்டத்தின் சிறப்பு அறிமுகமாக தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மட்டுமே சேவை தொடங்கப்பட்டிருக்கின்றது. இதன் அறிமுகம் நேற்று (ஆகஸ்டு 1) செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நாட்டின் பிற முக்கிய நகரங்களான சென்னை, புனே, ஹைதராபாத், கொச்சின் மற்றும் தலைநகர் டெல்லி, ஆகிய பகுதிகளிலும் கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. நடப்பாண்டின் இறுதிக்குள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அனைத்து நகரங்களிலும் புதிய சேவை நடைமுறைக்கு வரும் என ஆம்பியர் அறிவித்துள்ளது.

கட்டணம் எவ்வளவு?
உதாரணமாக ஆம்பியர் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டர் ஜீல் (Ampere Zeal) மாடலை பிற நித நிறுவனத்தின் மூலம் வாங்கினால், குறைந்தது மாதம் ரூ. 3,020 வரை இஎம்ஐ செலுத்த வேண்டும். ஆனால், ஆம்பியர் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ள ஓடிஓ நிறுவனத்தின் குத்தகைத் திட்டத்தின்கீழ் இந்த ஸ்கூட்டரை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் மாதம் ஒன்றிற்கு 800 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

அப்படியானால் மாதம் ஒன்றிற்கு குத்தகைக் கட்டணமாக ரூ. 2,020 மட்டுமே செலுத்தினாலே போதும். இப்படியான குறைந்த கட்டணத்தையே ஆம்பியர் மற்றும் ஓடிஓ நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்களுக்கு நிர்ணயித்துள்ளன. எனவே, இத்திட்டம் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாடகை அல்லது குத்தகைத் திட்டத்தைப் பெறுவது எப்படி?
ஆம்பியர் நிறுவனத்தின் இந்த சிறப்பு திட்டத்தைப் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என நினைத்தால், ஓடிஓ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தையோ அல்லது ஆம்பியர் விற்பனையகத்தையே நேரடியாக விசிட் செய்ய வேண்டும். ஒருவேலை ஓடிஓ வலைதளப்பக்கத்தின் வாயிலாக ஸ்கூட்டரை முன் பதிவு செய்ய விரும்பினால் குறிப்பிட்ட சில தகவல்களை உள்ளீடு செய்தாலே போதும் விரைவில் அதற்கான அனுமதி வழங்கப்படும்.

மேலும், 24 மணி நேரத்தில் ஸ்கூட்டர் டெலிவரியும் வழங்கப்படும். இதே செயல்முறைதான் நேரடியாக விற்பனையகத்தை தொடர்புக் கொள்ளும்போது மேற்கொள்ளப்படுகின்றது. ஆம்பியர் நிறுவனத்தின் இந்த சிறப்பு சேவை மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இதனால் கால் டாக்சி துறை மிகப்பெரிய நலிவைச் சந்திக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே பைக் டாக்சி இந்தியாவில் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது. இந்த நிலையில், கார்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை குறைந்த விலையில் வாடகை மற்றும் குத்தகைத் திட்டத்தில் அறிமுகம் செய்வது டாக்சி துறையைக் கூடுதலாக பதம் பார்க்கும் என்றே அஞ்சப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








