ஏப்ரிலியா இந்திய இணையதளத்தில் இடம்பிடித்த டூனோ 125 பைக்... விரைவில் அறிமுகம்?
ஏப்ரிலியா இந்திய இணையதளத்தில் டூனோ 125 பைக் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த பைக்கின் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஏப்ரிலியா நிறுவனம் இந்திய பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்திய சந்தைக்கு தக்கவாறான வர்த்தக திட்டங்களை வகுத்து, அதற்கேற்ப புதிய மாடல்களை களமிறக்கவும் முடிவு செய்துள்ளது.

இந்த சூழலில், அந்நிறுவனத்தின் பிரபலமான டூனோ 125 பைக் இந்திய இணையதளத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, இந்தியாவில் இந்த பைக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதுவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், மிக விரைவில் இந்த பைக்கை கொண்டு வரும் முயற்சியாக இருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும், குறைவான சிசி திறன் கொண்ட பைக் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக ஏப்ரிலியா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த புதிய 125சிசி பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டூனோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த இரண்டு மாடல்களும் நிச்சயம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லை. இந்த சூழலில்தான் டூனோ 125 பைக் இந்திய இணையதளத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டாலும், தொழில்நுட்ப விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த புதிய பைக் மாடலில் 124சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஏப்ரிலியா டூனோ 125 பைக்கின் முன்புறத்தில் 40 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கும். அதேபோன்று, முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர் கொண்ட 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் கொண்ட 218 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

ஏப்ரிலியா டூனோ 125 பைக்கில் 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 100/80 டயரும், பின்சக்கரத்தில் 130/70 டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 டிசைன் அம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கிறது. தவிரவும், எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், உயர்த்தப்பட்ட அமைப்புடன் ஹேண்டில்பார் ஆகியவற்றுடன் மிக வசீகரமாக இருக்கிறது.
ஏப்ரிலியா டூனோ 125 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், ரூ.1.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். கேடிஎம் 125 பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








