ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 6 நகரங்களில் அறிமுகமாகிறது
ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 6 நகரங்களில் விற்பனைக்கு செல்ல இருப்பது தெரிய வந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த ஏத்தர் நிறுவனம் 450 என்ற பிரிமீயம் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. ஆனால், பெங்களூர் மற்றும் சென்னை நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நிகரான அம்சங்களுடன் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கேடிஎம் நிறுவனத்தின் ஷோரூம்கள் வாயிலாக நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இதனால், ஏத்தர் 450 ஸ்கூட்டர் சந்தைக்கு பெரிய நெருக்கடி வாய்ப்பு இருக்கிறது. இதனை மனதில் வைத்து, தனது 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் 450எக்ஸ் என்ற அதிக சிறப்பம்சங்கள் கொண்ட புதிய மாடலை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்தது.

புதிய 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சென்னை மற்றும் பெங்களூர் மட்டுமின்றி, நாட்டின் பிற நகரங்களிலும் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஏத்தர் நிறுவனம். ஹைதராபாத், டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியம், மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, கோவை, கொச்சி, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் நகரங்களில் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் லிமிடேட் எடிசன் மாடலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதால், வாடிக்கையாளர் மத்தியில் இந்த ஸ்கூட்டர் குறித்து பேராவல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு மிக விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஏத்தர் 450 ஸ்கூட்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.4kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து 7.2 பிஎச்பி பவரையும், 20.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 107 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வாய்ப்பை தரும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் செயல்திறன் மற்றும் பேட்டரி ரேஞ்ச் மேம்படுத்தப்பட்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக விரைவில் அதிகாரப்பூர்வ விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








