ஹீரோ நிறுவனத்திடம் இருந்து பெரும் முதலீடு... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டை கலக்கப்போகும் ஏத்தர்
ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் புதிதாக ரூ.84 கோடியை முதலீடு செய்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முன்னணி நிறுவனமாக உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவங்கப்பட்ட ஏத்தர் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிக முதலீட்டை செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு 205 கோடியை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதலீடு செய்தது.

இதேபோல, பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சச்சின் பன்சால் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தில் அதிக முதலீடு செய்துள்ளார். இந்த சூழலில், வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது ஏத்தர் நிறுவனம்.

பெங்களூர், சென்னையில் மட்டும் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் விரைவில் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் டீலர்களை நியமித்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்க இருக்கிறது.

வெளிநாடுகளுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வர்த்தகத்தை துவங்குவதற்கு ஏதுவாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வித்ததில், ஓசூரில் புதிய தொழிற்சாலையை அமைத்து வருகிறது.

இந்த நிலையில், வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்திற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. இதனை மனதில் வைத்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தில் புதிதாக ரூ.84 கோடியை முதலீடு செய்துள்ளது.

இதன்மூலமாக, ஏத்தர் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்த முதலீடு ரூ.400 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏத்தர் நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 34.58 சதவீதத்தை ஹீரோ கைவசப்படுத்தி உள்ளது.

இந்த புதிய முதலீடுகள் மூலமாக ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கப் பணிகள் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டியுள்ளது. விரைவில் கோவை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களிலும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








