"ஆர்டர் செய்தால் மட்டுமே சேத்தக் டெலிவரி கிடைக்கும்" - பஜாஜ் அதிரடி அறிவிப்பு..!
முன்பதிவு செய்தால் மட்டுமே சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வழங்கப்படும் என பஜாஜ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்கூட்டர் விற்பனையில் தற்போதே களமிறங்கியுள்ளது. இதற்காக சேத்தக் பிராண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது அறிமுகம் செய்துள்ளது. இருசக்கர வாகனங்களை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், தங்களுக்கும் ஸ்கூட்டர்களுக்கும் மிக தூரம் என கூறுவதைப் போன்று அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

இதனால், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சேத்தக் மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம் கலந்த சூழ்நிலை நிலவியது. ஆனால், இந்த வதந்திக்கு முற்று புள்ளிக்கும் வைக்கும் விதமாக, எங்களின் கவனம் அதிகமாக ஸ்கூட்டர் பிரிவில் செலுத்தப்படாது. அதேசமயம், சேத்தக் விற்பனையையும் தற்போது நிறுத்துவதற்கான திட்டம் இல்லை என்பதை விளக்குகின்ற வகையில் ஓர் தகவலை வெளியிட்டது.

இந்த அறிவிப்பை அடுத்தே சேத்தக் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்தனர். அதேசமயம், எப்போதும் எங்களின் கவனம் அதிக லாபத்தை ஈட்டி தரும் பைக்குகள் மீதே இருக்கும். இதுவே எங்களின் கொள்கை என்றும் பஜாஜ் அறவித்திருந்தது.
இந்நிலையில், இந்த கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில், ஆர்டரின் பேரில் மட்டுமே பஜாஜ் சேத்தக்கின் உற்பத்தியை செய்ய இருப்பதாக புதிய அறிவிப்பு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆகையால், இனி பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவுகளின் எண்ணிக்கையை வைத்தே உற்பத்தி செய்யப்பட்டு, டெலிவரிக்கு வழங்கப்பட இருக்கின்றது.
பஜாஜின் இந்தநிலை, ஸ்கூட்டர் உற்பத்தியில் அது பெரியளவில் கவனம் செலுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றது. அதேசமயம், உற்பத்தி செய்யப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் ஷோரூம்களில் விற்பனையாகாமல் தேக்கமடைவதை தவிர்ப்பதற்காகவும் இந்த அதிரடி முடிவை அந்நிறுவனம் எடுத்திருக்கின்றது.

அதேசமயம், ஒரு பக்கம் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பே தற்போது வரை கிடைத்து வருகின்றது. இதற்கு, ஸ்கூட்டரின் ரம்மியமான ஸ்டைல் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளே முக்கிய காரணமாக இருக்கின்றது. தொடர்ந்து, இந்த ஸ்கூட்டருக்கு குறிப்பிட்ட தொகையின் அடிப்படையில் இப்போது முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

முன்பதிவுகளைத் தொடர்ந்தே அவை தயாரிக்கப்பட்டு டெலிவரி வழங்கப்பட உள்ளது. இந்த முன்பதிவினை வாடிக்கையாளர்கள் யாரேனும் ரத்து செய்ய விரும்பினால், அதற்கு 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.
பொய்யான வாடிக்கையாளர்களைத் தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கையை பஜாஜ் மேற்கொண்டிருக்கின்றது.

பஜாஜ் நிறுவனம் ஆரம்பகட்டமாக சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புனே மற்றும் பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிப்ரவரி மாதத்தின் இறுதிக்குள் டெலிவரி தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகையால், இன்னும் இரண்டு அல்லது மூன்ற வாரங்கள் இடைவெளியில் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்கள் பெங்களூரு மற்றும் புனே நகரங்களின் சாலைகளில் ரிங்காரமடிக்க இருக்கின்றன. இதையடுத்தே, இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களில் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் இந்த மின்சார ஸ்கூட்டர் அர்பன் மற்றும் பிரிமியம் ஆகிய இரு வேரியண்டுகளில் கிடைக்கின்றது. ரெட்ரோ ஸ்டைலில் காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டரில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
குறிப்பாக முழு டிஜிட்டல் கிளஸ்டர் கருவி, நேரடி டிராக்கிங், ப்ளூடூத் மற்றும் செல்போன் சார்ஜிங் வசதி என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அதில் காணப்படுகின்றது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி 70 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை நீடித்து உழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில், 3kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது, 4kW திறன் கொண்ட மின் மோட்டாருக்கு தேவையான எனர்ஜியை வழங்கும். இந்த மின்மோட்டார் 16 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனை கொண்டது.

சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். அதேசமயம் இதனை 25 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 1 மணி நேரமே போதுமானதாக இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை மாடல் ரூ. 1 லட்சம் என்றும் பிரிமியம் வேரியண்ட்டிற்கு ரூ. 1.15 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலைகளாகும்.


Click it and Unblock the Notifications








