பிஎஸ்6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி இம்பீரியல் 400!
பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் பல புதிய தேர்வுகள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, நடுத்தர க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிக வலுவான சந்தையை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் சந்தையை குறிவைத்து பல புதிய மாடல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில், கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கும் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், வரும் 1ந் தேதி முதல் புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதால், பெனெல்லி நிறுவனம் இம்பீரியல் 400 பைக்கின் பிஎஸ்6 மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, அடுத்த மாதம் பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது.

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில் 374சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வர இருக்கும் இந்த எஞ்சின் அதிகட்சமாக 20.7 பிஎச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது.

இந்த பைக்கில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் தவிர்த்து புதிய கேட்டலிடிக் கன்வெர்ட்டர் மற்றும் புதிய ஆக்சிஜன் சென்சார் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், புகையில் நச்சுத் தன்மை அளவு குறைவாக பராமரிக்கப்படும்.

புதிய பிஎஸ்6 மாடலில் எஞ்சின் தவிர்த்து, பிற பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்று தெரிகிறது. பாரம்பரிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள் ஸ்டைலிலான இந்த பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட், இரட்டை டயல்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்போக்ஸ் சக்கரங்கள் ஆகியவை உள்ளன.

இந்த பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், 18 சக்கரமும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது இந்த பைக் ரூ.1.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் விலை ரூ.10,500 வரை உயர்த்தப்பட்டு ரூ.1.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

இந்த நிலையில், புதிய மாடல் ரூ.10,000 வரை கூடுதல் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு 350சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு இது போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








