கவர்ச்சிகரமான நிறங்களில் புதிய ஹீரோ பேஷன் புரோ இந்தியாவில் அறிமுகம்..!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பேஷன் புரோ மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.64,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 அப்டேட்டாக ஏகப்பட்ட புதிய அப்டேட்களையும், திருத்தியமைக்கப்பட்ட டிசைன் பாகங்களையும் பெற்று வரும் இந்த பிஎஸ்6 ஹீரோ பேஷன் புரோ, ட்ரம் ப்ரேக்குகள் மற்றும் முன்புற டிஸ்க் என இரு வேரியண்ட்களில் டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதில் டாப் வேரியண்ட்டான முன்புற டிஸ்க் ப்ரேக் வேரியண்ட் ரூ.67,190 விலையிலும், ட்ரம் ப்ரேக்குகள் வேரியண்ட் ரூ.64,990 விலையிலும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. அப்டேட்டான ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லைட்டுடன் விற்பனையாகவுள்ள இந்த புதிய பிஎஸ்6 பைக்கின் பின்புறம் முந்தைய மாடலை விட நேர்த்தியாக உள்ளது.

இதனால் மற்ற வெளிப்புற பேனல்களும் அதிகளவில் வளைவான பாகங்களை கொண்டவையாக உள்ளன. கவர்ச்சிக்கரமான தோற்றத்திற்காக மஸ்குலர் பெட்ரோல் டேங்க்கையும், புதிய கிராஃபிக்ஸ் டிசைனையும் இந்த புதிய பேஷன் புரோ மாடல் ஏற்றுள்ளது.

ஹீரோ நிறுவனம் இந்த புதிய பிஎஸ்6 பைக்கிற்கு கருப்பு, க்ரே, மஞ்சள் மற்றும் சிவப்பு என அட்டகாசமான நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது. இந்த பிஎஸ்6 பைக்கில் மற்றொரு முக்கியமான அம்சமாக புதிய செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய க்ளஸ்ட்டர் மைலேஜ் மற்றும் ரியல்-டைம் எரிபொருள் திறன் உள்ளிட்ட ஏகப்பட்ட தகவல்களை வழங்கக்கூடியதாக உள்ளது. மேலும் ஹீரோ நிறுவனம் இந்த பைக்கின் க்ரவுண்ட் கிளியரென்ஸையும், 15 மிமீ வரையில் சஸ்பென்ஷன் அமைப்பையும் பிஎஸ்6 மாற்றத்தால் அதிகரித்துள்ளது.

இதேபோல் பிஎஸ்6 அப்டேட்டாக என்ஜின் அமைப்பில் வழக்கமாக உள்ள கார்புரேட்டர் சிஸ்டத்திற்கு பதிலாக புதிய எரிபொருள்-இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய ஹீரோ பேஷன் புரோ பைக்கை விட இந்த பிஎஸ்6 பைக் 5 சதவீதம் கூடுதலான எரிபொருள் திறனை வழங்கும்.

இவை மட்டுமின்றி நெரிசலான போக்குவரத்திலும் எளிமையான பயணத்திற்காக, ஆட்டோ சைல் செயல்பாடுகளுடன் இந்த பைக் சந்தைக்கு வரவுள்ளது. புதிய மாசு உமிழ்வு விதியினால் இதன் 110சிசி என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 9 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 9.79 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

110சிசி பைக்குகளின் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு வரும் பேஷன் புரோ இந்த பிரிவில் ஹீரோ நிறுவனத்தின் வெற்றிக்கரமான பைக் மாடல்களுள் ஒன்றாக விளங்குகிறது. பேஷன் புரோ மாடலின் இந்த பிஎஸ்6 வெர்சன் இந்நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான பைக் மாடலாக உள்ள ஸ்பிளென்டருக்கு மேல் நிலைநிறுத்தப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








