கம்பீரமாக ஷோரூமில் காட்சிதரும் பிஎஸ்6 சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பைக்!! விரைவில் டெலிவிரி துவங்குகிறது...
பிஎஸ்6 இணக்கமான மேம்படுத்தப்பட்ட சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. பைக்வாலே செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இதுகுறித்த படங்களை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் சுஸுகி வி-ஸ்ட்ரோம் மோட்டர்சைக்கிள் கடந்த 2020 நவம்பர் 23ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை முன்பு விற்பனையில் இந்த பைக்கின் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் ரூ.1.34 லட்சம் அதிகமாகும். இதன் பிஎஸ்6 வெர்சனிலும் அதே 654சிசி, 90-கோண, வி-இரட்டை என்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 70 பிஎச்பி மற்றும் 62 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதே என்ஜின் ஆற்றல் அளவுகளையே இதன் பிஎஸ்4 வெர்சனும் கொண்டிருந்தது.

என்ஜின் மட்டுமின்றி தோற்றத்திலும் இந்த இரு வெர்சனுக்கு இடையிலும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. பிஎஸ்4 மாடல் கொண்டிருந்த அதே செங்குத்தாக-அடுக்கப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பைதான் பிஎஸ்6 வி-ஸ்ட்ரோமும் கொண்டுள்ளது.

அதேபோல் எல்இடி டெயில்லேம்ப், கூடுதல் பிளாஸ்டிக் பேனல்கள், பெரியளவில் காற்றை தடுக்கும் கண்ணாடி, கை விரல்களை பாதுகாக்கும் பாதுகாப்பான், வயர்-ஸ்போக் சக்கரங்களுடன் ட்யுப்லெஸ் டயர்கள், துணை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவையும் தொடர்ந்துள்ளன.

சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பைக் சாம்பியன் மஞ்சள் மற்றும் பனிபாறையின் வெள்ளை என்ற இரு நிறங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. தற்போது டீலர்ஷிப் ஷோரூமிற்கு வந்துள்ள பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் உள்ளன.

அதேநேரம் பின்பக்கத்தில் மோனோ-ஷாக் உள்ளது. ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 310மிமீ அளவில் டபுள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 260மிமீ-ல் சிங்கிள் மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளன.

பைக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய இரட்டை-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் ட்ராக்ஷன் கண்ட்ரோல் மூன்று நிலைகளை கொண்டதாக கொடுக்கப்படவுள்ளது. முன் சக்கரம் 19 இன்ச் மற்றும் பின் சக்கரம் 17 இன்ச் ஆகும்.

சுஸுகி வி-ஸ்ட்ரோம் பைக்கின் உயரம் 1,405மிமீ, நீளம் 2,275மிமீ, அகலம் 910மிமீ ஆகும். தரையில் இருந்து 835மிமீ-ல் உயரத்தில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 170மிமீ-இல் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கில் அதிகப்பட்சமாக 20 லிட்டர் பெட்ரோலை நிரப்பி கொள்ளலாம்.

கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பிஎஸ்6 சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி மோட்டார்சைக்கிள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டதால் பைக்கின் டெலிவிரி பணிகள் விரைவில் துவங்கப்பட்டுவிடும்.


Click it and Unblock the Notifications








