ஹார்லி டேவிட்சனுடன் கூட்டணி வைக்க நாங்க ரெடி: ஹீரோ அறிவிப்பு!
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதற்கு தயாராக இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சக்திவாய்ந்த பிரிமீயம் ரக க்ரூஸர் பைக் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறது. தற்போது 750 சிசி திறனுக்கும் மேலான ரக பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வர்த்தகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 500 சிசி திறனுக்கும் குறைவான ரகத்தில் புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், உள்ளூர் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த பைக்குகளை தயாரித்து விற்பனை செய்வதற்கான திட்டத்தையும் வைத்துள்ளது.

சீனாவை சேர்ந்த ஸெஜியாங் கியான்ஜியாங் மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து குறைவான பைக்குகளை உற்பத்தி செய்ய உள்ளது. இதே பாணியில் இந்தியாவிலும் பைக் உற்பத்தியை உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து செய்வதற்கான முயற்சிகளில் ஹார்லி டேவிட்சன் ஈடுபட்டுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும், இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து 250சிசி முதல் 500சிசி வரையிலான பைக்குகளை உற்பத்தி செய்வதற்கும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஆட்டோமொபைல் தளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்திகளுக்கு இரு நிறுவனங்களும் பதில் அளிக்கவில்லை.

இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பது குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிடுகையில்," இந்த காலக்கட்டத்தை வாகன நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கான யுகமாக கருதுகிறேன்.

கூட்டணி அமைக்க எங்களுக்கு ஒத்திசைவான சரியான நிறுவனம் வரும்போது நிச்சயம் அதனை ஏற்றுக் கொள்வோம். இந்திய மார்க்கெட்டில் குறிப்பிட்ட ரக பைக் மார்க்கெட்டில் களமிறங்க சில நிறுவனங்கள் எத்தனித்து வருகின்றன. நாங்களும் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் இறங்குவதற்கான திட்டத்துடன் உள்ளோம். அவ்வாறு ஒத்திசைவு ஏற்படும்போது, நிச்சயம் கூட்டணி அமைவதில் எந்த பிரச்னையும் இல்லை," என்று தெரிவித்துள்ளார்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த வந்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு, எங்களுக்கு ஒத்திசைவான நிறுவனம் வரும்போது, நிச்சயம் ஏற்போம்," என்று தெரிவித்துள்ளார்.

பவன் முஞ்சால் தெரிவித்துள்ள கருத்து, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திடம் இருந்து பேச்சு நடந்த முன்வந்தால், அதனை ஏற்றுக் கொள்வதற்கு தயார் என்ற ரீதியில் உள்ளது. எனவே, இதுகுறித்து ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 338 சிசி பைக் குறித்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் ஆட்டோமொபைல் இணையதளங்கள் மூலமாக வெளி உலகத்திற்கு கசிந்தன. வரும் 2022ம் ஆண்டில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 250 சிசி முதல் 500சிசி வரையிலான ரக பைக் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளது.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ மோட்டோராட் மற்றும் பஜாஜ் - ட்ரையம்ஃப் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே, இதே பாணியில் பைக் மாடல்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் திறன் வாய்ந்த மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் தடம் பதிக்க, புதிய பார்ட்னரை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
Source: TOI


Click it and Unblock the Notifications








