வரும் ஜனவரி 1 முதல் அமல்... ஹீரோ நிறுவன டூவீலர்களின் விலை அதிரடியாக உயர்கிறது... எவ்வளவுனு தெரியுமா?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப், தனது தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விலை 1,500 ரூபாய் வரை உயரவுள்ளது. வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

இது தொடர்பான அறிவிப்பை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இன்று (டிசம்பர் 16ம் தேதி) வெளியிட்டது. இந்த விலை உயர்வானது மாடலுக்கு மாடல் மாறுபடும். ஒவ்வொரு மாடலின் விலையும் எவ்வளவு உயரவுள்ளது? என்ற துல்லியமான தகவல் சரியான நேரத்தில் டீலர்களுக்கு தெரிவிக்கப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டீல், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே இதனை ஓரளவிற்கு ஈடு செய்யும் விதமாக இரு சக்கர வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பல்வேறு கார் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ஃபோர்டு இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளன. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

இனி வரும் நாட்களில் இன்னும் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டில் புதிய வாகனங்களின் விலை உயரவிருப்பது வாடிக்கையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வந்த பின் வாகனங்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. ஆனால் ஊரடங்கில் ஓரளவிற்கு தளர்வுகள் வழங்கப்பட்ட பின் வாகனங்களின் விற்பனை ஓரளவிற்கு உயர தொடங்கியது. குறிப்பாக செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் வாகனங்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது.

பண்டிகை காலமே இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. பண்டிகை காலத்தை குறிவைத்து முன்னணி வாகன நிறுவனங்கள் புதிய இரு சக்கர வாகனங்கள், கார்களை விற்பனைக்கு கொண்டு வந்தன. இதுதவிர கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்திற்கு பதிலாக, சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பாக கருதியதும் வாகன விற்பனை உயர்விற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் தற்போது பண்டிகை காலம் முடிவடைந்துள்ள நிலையில், வாகன விற்பனையில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலம் நிறைவடைந்தால் வாகன விற்பனையில் கொஞ்சம் சரிவு ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம்தான். என்றாலும் இந்த விலை உயர்வு வாகன விற்பனையில் இன்னும் சரிவை உண்டாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








