புதிய மொபட்டை இந்தியாவில் களமிறக்க தயாராகும் ஹோண்டா... இணையத்தில் கசிந்த தகவல்!
ஹோண்டா நிறுவனம் புதுமுக மொபட்டிற்கான காப்புரிமையை இந்தியாவில் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், இந்தியாவில் புது விதமான இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அந்நிறுவனம் புதுமுக இருசக்கர வாகனத்திற்கான காப்புரிமையை இந்தியாவில் பெற்றிருக்கின்றது.

அவ்வாறு, அது காப்புரிமைப் பெற்றிருக்கும் இருசக்கர வாகனத்தின் புகைப்படமே தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் மொபட் ரக இருசக்கர வாகனமாகும். ஹோண்டாவின் இந்த புதிய மொபட் பற்றிய தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும், தற்போதே அந்த வாகனத்திற்கான காப்புரிமையை அந்நிறுவனம் இந்தியாவில் பெற்றிருக்கின்றது.

பைக் அட்வைஸ் வெளியிட்ட ஹோண்டா மொபட் படம்
எனவே, இது விரைவில் இந்தியாவில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தகவல் வாகன ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய மொபட், நம்மை நம்முடைய முன்னோர்கள் காலத்திற்கு அழைத்துச் செல்லுகின்ற தோற்றத்தில் உருவாக்கப்பட இருக்கின்றது.

இதையேதான் தற்போது காப்புரிமைப் பெற்றிருப்பதாக வைரலாகிக் கொண்டிருக்கும் புகைப்படங்களும் உறுதிச் செய்கின்றன. ஆம், நம் அப்பா மற்றும் தாத்தா காலத்தில் பயன்பாட்டுக்கு வந்த மொபட்டுகளின் ஸ்டைலில் ஹோண்டாவின் இந்த புது முக மொபட் காட்சியளிக்கின்றது.

இதன் பின்னிருக்கைக்கு பதிலாக லக்கேஜ் கேரியர் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, மொபட்டின் உடல் கட்டமைப்பும் கூட பழைய டிவிஎஸ் மொபட்டுகளைப் போன்றே காட்சியளிக்கின்றது. எனவே, சிடி125 என குறிப்பிடப்படும் இந்த மொபட் நம்மை நம்முடைய சிறு வயதுக்கே அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டா நிறுவனம், சிடி125 எனும் பெயரில்தான் முதல் முறையாக இந்த மொபட்டை உலகிற்கு அறிமுகம் செய்திருந்தது. கடந்த 2019ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில்தான் அந்த அறிமுகம் அரங்கேறியிருந்தது. இதைத்தொடர்ந்து, நடப்பாண்டு மார்ச் மாதமும் அந்த மொபட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக அது அறிவித்திருந்தது. ஆனால், தற்போதைய கொரோனா வைரஸ் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

புதிய மொபட்டின் தோற்றம் பழைய மனம் மாறாமல் இருப்பதை உணர்த்துகின்றது. இருந்தாலும், மொபட்டில் இடம்பெறவிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் நவீன யுகத்திற்கு ஏற்பதாகவே இருக்கும். இதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்தில் டிஸ்க் பிரேக், எஞ்ஜின் பாதுகாப்பு கவசம், இருக்கையின் பக்கவாட்டில் செல்லும் எக்சாஸ்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன.

இந்த மொபட்டில் சிறந்த எஞ்ஜின் திறனுக்காக 124.9 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு, எஸ்ஓஎச்சி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.8 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க்கை வெளியேற்றும். ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் எஞ்ஜினின் திறனில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

இந்த எஞ்ஜின் கிக் ஸ்டார்ட் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் ஆகிய திறனிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த மொபட் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. அதேசேயம், இதன் உற்பத்தி பணியும் எப்போது தொடங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இதுமட்டுமின்றி, சிறந்த சஸ்பென்ஷனுக்காக டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், இன்கார்பரேட் ஃபோர்க் கெயிட்டர்ஸும் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக சுமை மற்றும் கரடு முரடான சாலையில் பயணிப்பதற்கு ஏதுவான அம்சம் கொண்டதாகும். இந்த அம்சம் மட்டுமின்றி அதன் டயர்களும் இரு வித பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இடம்பெற செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மொபட்டையே விரைவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








