ஹார்னெட் 2.0 பைக் அடிப்படையில் புதிய அட்வென்ச்சர் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!
ஹார்னெட் 2.0 பைக்கின் அடிப்படையில் புதிய அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் நம்பர்-1 இடத்தை குறிவைத்து ஹோண்டா காய் நகர்த்தி வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சந்தையை விஞ்சுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதற்கு ஏதுவாக பல புதிய மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் திட்டங்களை கையில் எடுத்துள்ளது.

அதன்படி, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு போட்டியாக புதிய சாகச வகை பைக் மாடலை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கார்அண்ட்பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஹோண்டா டூவீலர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அட்சுஷி ஒகட்டா,"இந்தியாவில் பல்வேறு வகையான பைக் மாடல்களை கொண்டு வருவதற்கான திட்டம் உள்ளது.

சாகச வகை பைக் மாடலையும் களமிறக்கும் வாய்ப்புகள் பரிசீலனை செய்து வருகிறோம். ஆனால், அது குறைவான சிசி திறன் கொண்ட மாடலாக இருக்கலாம். ஹார்னெட் 2.0 பைக் புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பெரிய அளவில் முதலீடு செய்துள்ளோம்.

எனவே, இந்த கட்டமைப்புக் கொள்கையில் புதிய மாடல்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆசிய நாடுகளில் எங்களிடம் ஏற்கனவே ஆஃப்ரோடு மற்றும் ராலி ரேஸ் வகை பைக் மாடல்கள் உள்ளன. எனவே, புதிய மாடல்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

அட்சுஷி ஒகட்டா தெரிவித்துள்ள தகவலின்படி, ஹார்னெட் 2.0 அடிப்படையில் 180சிசி முதல் 200சிசி இடையிலான ரகத்தில் புதிய சாகச வகை பைக் மாடலை ஹோண்டா களமிறக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாக தெரிகிறது.

இந்த பைக் நேரடியாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்படும். ஹோண்டாவின் சிஆர்எஃப் 250எல் பைக் மாடல்களின் டிசைன் அம்சங்களுடன் இந்த புதிய சாகச வகை பைக் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








