ஹோண்டா ரிபெல் 500 க்ரூஸர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!
ஹோண்டா ரிபெல் 500 க்ரூஸர் பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த பைக் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 4 புதிய 500 சிசி பைக்குகளை களமிறக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த நான்கு புதிய பைக் மாடல்களும் வெவ்வேறு ரகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

ஹோண்டாவின் இந்த நான்கு புதிய 500 சிசி பைக்குகளில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள மாடல்தான் ஹோண்டா ரிபெல் 500 என்ற க்ரூஸர் வகை பைக். அதாவது, நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவான தகவமைப்புகளை கொண்ட மாடலாக இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில்தான் இந்த புதிய பைக் மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போதே, பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஒரு உண்மையான க்ரூஸர் பைக் உணர்வை ஓட்டுபவருக்கு தரும் வகையில் மிக அசத்தலான சிறப்புகளை இந்த பைக் பெற்றிருக்கிறது. வசதியான இருக்கை அமைப்பு, ஹேண்டில்பார், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வில் வருகிறது.

இந்த புதிய ஹோண்டா ரிபெல் 500 பைக்கில் 471 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. லிக்யூடு கூல்டு சிஸ்டம் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 45 பிஎச்பி பவரையும், 44.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

புதிய ஹோண்டா ரிபெல் 500 பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்சிடி திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. 11.2 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

இந்த பைக்கானது சில்வர், கருப்பு, நீலம் ஆகிய வண்ணத் தேர்வுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதே வண்ணத் தேர்வுகள் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

ரூ.4.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் இந்த புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய பைக் மாடலானது ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Source: Bikedekho


Click it and Unblock the Notifications








