கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
கவாஸாகி வெர்சிஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் பிஎஸ்-6 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கவாஸாகி நிறுவனம் நடுத்தர வகை பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் மிகவும் வலுவான போட்டியாளராக உள்ளது. இந்த செக்மெண்ட்டில் நின்ஸா 650 என்ற ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடல், இசட்650 என்ற நேக்கட் ரக பைக் மாடல் மற்றும் வெர்சிஸ் 650 என்ற அட்வென்ச்சர் டூரர் ரக மாடல் என மூன்று பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 1 முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த நிலையில், நின்ஜா 650 மற்றும் இசட்650 ஆகிய பைக் மாடல்களின் பிஎஸ்-6 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது வெர்சிஸ் 650 பைக்கின் பிஎஸ்-6 மாடலின் விலை உள்ளிட்ட சில விபரங்களை தனது இணையதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது கவாஸாகி.
இந்த பைக்கில் இருக்கும் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 649சிசி எஞ்சின் அதிகபட்சமாக 67 எச்பி பவரையும், 63 என்எம் டார்க் திறனை வழங்க வல்லதாக இருக்கும் என தெரிகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
கவாஸாகி வெர்சிஸ் 650 பிஎஸ்6 மாடலில் 21 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. முன்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு உள்ளது. டிஜிட்டல் மற்றும் அனலாக் மீட்டர் கன்சோல் பொருத்தப்பட்டு இருக்கிறது.
புதிய கவாஸாகி இசட்650 மற்றும் நின்ஜா 650 பைக்குகளில் இருப்பது போன்று எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஎஃப்டி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இந்த பைக் மாடலில் இல்லாதது ஏமாற்றமான விஷயமாகவே இருக்கிறது.
எனவே, பழைய பிஎஸ்-4 மாடலில் இருந்து இந்த புதிய பிஎஸ்-6 மாடலின் தோற்றத்தில் எந்த வேறுபாடுகளும், கூடுதல் சிறப்பம்சங்களும் இல்லை. அதேபோன்று, விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது ஆறுதலான விஷயமாக இருக்கிறது.
புதிய கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கின் பிஎஸ்-6 மாடலுக்கு ரூ.6.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 பைக்கின் பிஎஸ்-6 மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








