இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது 2020 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக்...
இந்திய சந்தையில் கடந்த மே மாதத்தில் அறிமுகமான கவாஸாகி நிறுவனத்தின் 2020 நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக் மாடல் டீலர்ஷிப்களை சென்றடைந்து வருகிறது. இதுகுறித்து பைக்வாலே செய்தி தளம் வெளியிட்டுள்ள கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது மட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலத்திலும் இணையம் மூலமாக பைக்கை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி செய்யும் பணியும் துவங்கியுள்ளது. லிட்டர்-க்ளாஸ் ஸ்போர்ட்ஸ் டூரரின் லேட்டஸ்ட் மாடலான இந்த பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.10,79,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது இதன் முந்தைய தலைமுறை பைக்கை காட்டிலும் 50,000 ரூபாய் அதிகமாகும். இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ப இந்த 2020 மாடலில் கவனிக்கத்தக்க வகையில் அப்டேட்களை கவாஸாகி நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி என்ஜின் அமைப்பானது முழுவதும் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட்டாகியுள்ள இதன் 1,043சிசி, லிக்யூடு-கூல்டு, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 140 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்-ல் 111 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜின் மட்டுமின்றி 2020 நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக்கின் ஸ்டைலிங் அம்சங்களை தயாரிப்பு நிறுவனம் திருத்தியமைத்துள்ளது.

இதனால் சற்று திருத்தியமைக்கப்பட்ட முன்புறத்துடன் காட்சியளிக்கின்ற இந்த பைக்கில் ஒரு-பக்க எக்ஸாஸ்ட் அமைப்பு, பெரிய விண்ட்ஸ்க்ரீன் மற்றும் கூடுதல் சவுகரியத்திற்காக மேம்படுத்தப்பட்ட பில்லன் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல் புதியதாக இந்த 1000சிசி பைக்கில் வழங்கப்பட்டுள்ள 4.3 இன்ச், முழு-கலர் டிஎஃப்டி திரையானது கவாஸாகியின் ஸ்மார்ட்போன் செயலி மற்றும் ரிடியோலாஜி செயலியுடன் செயல்படும்.

பைக்கில் உள்ள மற்ற வசதிகளாக எலக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல், 3-நிலை ட்ராக்ஷன் கண்ட்ரோல், இரு பவர் மோட்கள், குயிக் ஷிஃப்டர், ஆண்டி-லாக்கிங் ப்ரேக் சிஸ்டம் மற்றும் கார்னரிங் மேனேஜ்மெண்ட் செயல்பாடு போன்றவை வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








