டீலர்ஷிப் ஷோரூம்களில் கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்.. முன்பதிவு தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா..?
கடந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட கவாஸாகி நிஞ்சா 650 பைக் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நாடு முழுவதும் துவங்கியுள்ளன. இதுகுறித்து பைக்தேக்கோ செய்தி தளம் வெளியிட்டுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த மாத அறிமுகத்தின்போது புதிய நிஞ்சா 650 பைக்கிற்கு ரூ.6.24 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக கவாஸாகி நிறுவனம் நிர்ணயித்து இருந்தது. இது இதற்கு முன் விற்பனையில் இருந்து இதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் சுமார் ரூ.35,000 அதிகமாகும்.

லைம் க்ரீன், பேர்ல் வொய்ட் என்ற இரு நிற தேர்வுகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த 650சிசி பைக்கிற்கான முன்பதிவு ரூ.49,000 தொகையுடன் ஏற்று கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பைக்கை முன்பதிவு செய்ய விரும்புவோர் கவாஸாகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கமான https://kawasaki-india.com-ஐ அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

2020ஆம் ஆண்டிற்காக மேம்படுத்தப்பட்டுள்ள நிஞ்சா 650 மாடலின் இந்த புதிய தலைமுறை பைக்கில் கூர்மையான வடிவத்தில் புதிய பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்லைட் அமைப்பை கவாஸாகி நிறுவனத்தின் நிஞ்சா 400 மாடலிலும் பார்க்க முடியும்.

இது மட்டுமின்றி புதிய நிஞ்சா 650 பைக்கில் புதியதாக 4.3 இன்ச்சில் கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மூலமாக ஓட்டுனர் தனது ஸ்மார்ட்போனை இணைத்து கொள்ள முடியும்.

இந்த புதிய பைக்கில் வழக்கமான 650சிசி இணையான-இரட்டை என்ஜின் அமைப்பை கவாஸாகி நிறுவனம் பிஎஸ்6 தரத்தில் வழங்கியுள்ளது. மேலும் இந்த என்ஜின் பைக்கிற்கு வழங்கக்கூடிய 8000 ஆர்பிஎம்-ல் 68 பிஎச்பி மற்றும் 6700 ஆர்பிஎம்-ல் 65.7 என்எம் டார்க் திறன் உள்ளிட்ட ஆற்றல் அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

இருப்பினும் பிஎஸ்4 பைக்கை காட்டிலும் சிறப்பான பைக் சத்தத்திற்காக இந்த என்ஜின் ரீட்யூன்டு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த என்ஜின் உடன் இணைக்கப்படும் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பிலும், 196 கிலோ எடையிலும் எந்த மாற்றமும் இல்லை.

இதேபோல் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், புதிய டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டயர்களை 2020 நிஞ்சா 650 பைக்கில் கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது. டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால் இந்த 2020 கவாஸாகி பைக்கின் டெலிவிரியை விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








