ஈசிஆர் சாலையில் பறந்த புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் - ஸ்பை படங்கள்!
ஈசிஆர் சாலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படங்கள், இந்த மோட்டார்சைக்கிள் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தனது 350சிசி மோட்டார்சைக்கிள்களை புதிய தலைமுறை மாடல்களாக மாற்றும் முயற்சியில் ராயல் என்ஃபீல்டு ஈடுபட்டுள்ளது. அதன்படி, சிறந்த க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களின் அம்சங்களை கொண்ட தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளை புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தி உள்ளது.

இந்த மோட்டார்சைக்கிள் நாடு முழுவதும் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் புதிய தலைமுறை ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போதைய தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளிலிருந்து அதிக வேறுபாடுகளுடன் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருப்பது இந்த ஸ்பை படங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். க்ரோம் வளையத்துடன் கூடிய வட்ட வடிவிலான ஹெட்லைட், டிஜிட்டர் திரை மற்றும் அனலாக் மானிகளுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கைகளின் வடிவமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கில் V வடிவிலான அலாய் வீல்கள் மற்றும் கருப்பு வண்ணத்திலான எஞ்சின் கேஸ் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இண்டிகேட்டர்கள் மற்றும் ஃபுட்பெக்குகளின் டிசைனிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவிலான டெயில் லைட்டுகள் க்ரோம் வளையத்துடன் இடம்பெர்றுள்ளன. அதேபோன்று, பின்புற நம்பர் பிளேட்டை ஒட்டி இருபுறத்திலும் இண்டிகேட்டர்கள் உள்ளன.

இந்த மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் இடம்பெர்றுள்ளன. கருப்பு வண்ண புகைப்போக்கி குழாயும் முக்கிய விஷமயாக இருக்கிறது.

இந்த புதிய மாடலில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான350 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 19 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.

இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலானது மீட்டியோர் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. இதே பிளாட்ஃபார்மில் புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளும் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
Spy Images Source: Rushlane

Click it and Unblock the Notifications








