சுஸுகி இன்ட்ரூடெர் 150 பிஎஸ்6 பைக் விற்பனைக்கு அறிமுகம்!
சுஸுகி இன்ட்ரூடெர் 150 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் விலை குறைவான க்ரூஸர் பைக் மாடல்களில் ஒன்றாக சுஸுகி இன்ட்ரூடெர் உள்ளது. வரும் 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 154.9 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13 பிஎச்பி பவரையும், 13.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பிஎஸ்4 மாடலைவிட பவர் மற்றும் டார்க் திறன் வழங்குவதில் சற்றே குறைந்துள்ளது.

புதிய இன்ட்ரூடெர் பைக்கில் சுஸுகியின் ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் தொழில்நுட்பம் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் ஆகியவை மூலமாக குறைவான மாசு உமிழ்வும், அதேநேரத்தில், செயல்திறன் சிறப்பாகவும் இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சுஸுகி இன்ட்ரூடெர் வரிசையில் 1800சிசி உள்ளிட்ட விலை உயர்ந்த இன்ட்ரூடெர் பைக்குகளின் டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், முழுமையான எல்சிடி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கில் 17 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன முன்சக்கரத்தில் 100/80 டயரும், பின்சக்கரத்தில்140/60 டயரும் பொருத்தப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது.

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. எஞ்சினை தவிர்த்து, பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

புதிய சுஸுகி இன்ட்ரூடெர் பிஎஸ்6 மாடலானது மெட்டாலிக் மேட் பிளாக் - கேண்டி சனோமா ரெட், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் - மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர் மற்றும் மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் பிஎஸ்6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலுக்கு ரூ.1.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய பிஎஸ்4 மாடலைவிட விலை ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள சுஸுகி டீலர்களில் முன்பதிவு ஏற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








