வேற லெவல்... ஒரே மாதத்தில் 3.15 லட்சம் ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்தது ஹீரோ...
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒரே மாதத்தில் 3.15 லட்சம் ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 3.15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஹீரோ ஸ்பிளெண்டர் சுமார் 19 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக 7,91,137 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு ஸ்பிளெண்டர்தான் மிக முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மொத்த விற்பனையில், ஸ்பிளெண்டரின் பங்களிப்பு மிக சிறப்பான ஒன்று அமைந்துள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்தியாவில் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமையை ஹீரோ மோட்டோகார்ப் தக்க வைத்து கொள்வதற்கு இந்த எண்கள் உதவி செய்துள்ளன. அத்துடன் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் 33.40 சதவீதமாக இருந்த ஹீரோ நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் நடப்பாண்டு அக்டோபரில் 38.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் என்ற மூன்று வெவ்வேறு பைக்குகளை உள்ளடக்கியதாக ஸ்பிளெண்டர் வரிசை உள்ளது. இதில், ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கில், 97.2 சிசி ஏர் கூல்டு, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர், ஓஹெச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 8,000 ஆர்பிஎம்மில் 8 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 8.05 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மறுபக்கம் ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கில், 113.2 சிசி ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7,500 ஆர்பிஎம்மில் 9.15 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 9.89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அதே சமயம் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில், 124.7 சிசி ஏர் கூல்டு, 4-ஸ்ட்ரோக், ஓஹெச்சி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10.87 பிஎஸ் பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் ஆகிய பைக்குகளில் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் இந்த சிறப்பான விற்பனைக்கு சமீபத்தில் நிறைவடைந்த பண்டிகை காலமே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து, ஏப்ரல், மே மாதங்களில் டூவீலர் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது.

ஆனால் அதன் பின்னர் வந்த மாதங்களில் விற்பனை படிப்படியாக மீண்டு வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை மிக சிறப்பாக இருந்துள்ளது. பண்டிகை காலம் இதற்கு முக்கியமான காரணம் என்றாலும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை காட்டிலும், சொந்த இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதை பலர் பாதுகாப்பானதாக கருதுவதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








