ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து படிக்கலாம்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தீவிரமாக இறங்கி இருக்கிறது. முதல் மாடலாக தனது அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் பிஎஸ்-6 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பிஎஸ்-6 மோட்டாரசைக்கிளுக்கு ரூ.1.65 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பழைய பிஎஸ்-4 மாடலைவிட விலை ரூ.11,000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பிஎஸ்- 6 மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக இதன் எஞ்சின் பற்றி முதலில் பார்க்கலாம். இதில் உள்ள 346 சிசி எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதாவது, கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த அலாய் சக்கரங்கள் தேர்வும், ட்யூப்லெஸ் டயரும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பிஎஸ்-6 மாடலில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன் புதிய வண்ணக் கலவைகளில் புதுப்பொலிவுடன் வந்துள்ளது. சிக்னல்ஸ் ஏர்போர்ன் புளூ, சிக்னல்ஸ் ஸ்டோர்ம்ரைடர் சேண்ட், கன்மெட்டல் க்ரே மற்றும் கிளாசிக் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது தவிரவும், ஸ்டீல்த் பிளாக் மற்றும் க்ரோம் பிளாக் என்ற இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பிஎஸ்-6 மாடலில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பாதுகாப்பு தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பிஎஸ்-6 மாடலுக்கு அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் ரூ.10,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பிஎஸ் -6 மாடலுக்கு 3 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. அதேபோன்று, சாலை அவசர உதவி திட்டத்தையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் மற்றும் பெனெல்லி இம்பீரியல் மோட்டார்சைக்கிள்களுடன் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பிஎஸ்-6 மாடல் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








