சலுகைகளை வாரி வழங்கும் ராயல் என்பீல்டு... விட்ட இடத்தை பிடிக்க அதிரடி? குறுகிய நாட்களுக்கு மட்டுமே!
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சில நாட்களுக்கு இந்திய வாகனச் சந்தை பூஜ்ஜிய விற்பனை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் இருந்து விடுபடுவதற்காக ராயல் என்பீல்டு சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் பரவல் கராணமாக நெடு நாட்களாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீடித்த வண்ணம் இருக்கின்றது. இதனால், நாட்டின் அனைத்துத்துறையும் இயக்கமற்ற நிலையில் முடங்கிக்கிடக்கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி நாட்டின் உற்பத்தி மற்றும் விற்பனை திறனும் அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கின்றது. இதனை மீட்டெடுக்கும் விதமாக 3.0 வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் தேசியளவிலான ஊரடங்கு உத்தரவில், மத்திய அரசு லேசான தளர்வை வழங்கியிருக்கின்றது.

இத்தளர்வு வைரசால் பாதிக்கப்பட்ட பகுதியின் தன்மையைப் பொருத்து வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை போன்ற நகரங்களில் மக்கள் வழக்கம்போல் நடமாட தற்போதும் தடை விதிக்கப்பட்ட நிலையே உள்ளது.

அதேசமயம், கொரோனா தொற்று குறைவாக தென்படும் குறிப்பிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களும் அடங்கும். அதாவது, பச்சை மண்டலங்களாக காட்சியளிக்கும் இடங்களில் அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் விற்பனை மற்றும் குறைந்தபட்ச வேலையாட்களுடன் உற்பத்தி பணியையும் தொடங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை அடுத்து வாகன விற்பனையாளர்கள் (டீலர்கள்) புதிய உத்வேகத்துடன் களத்தில் இறங்கியிருக்கின்றனர். குறிப்பாக, இவர்கள் கடந்த மாதங்களில் விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர். இதற்காக சிறப்பு சலுகைகளை வாரி வழங்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனமும், அதன் அனைத்து தயாரிப்புகளுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது.
அது வெளியிட்டுள்ள தகவலின்படி, வருகின்ற 31ம் தேதி வரை இணையத்தின் வாயிலாகவோ அல்லது தங்களின் டீலர்களின் வாயிலாக எந்தவொரு தயாரிப்பையும் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பில் சிறப்பு சலுகைகளை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

இத்திட்டம் இப்போது பைக்குகளைப் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமின்றி கொரோனா லாக்டவுண் காலத்தில் புக்கிங் செய்தவருக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது. எனவே, இனி புக்கிங் செய்பவர்கள் மட்டுமின்றி மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து ராயல் என்பீல்டு பைக்குகளைப் புக்கிங் செய்தவர்கள் இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

இத்திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்களின் தேர்வைப் பொருத்து இலவச அக்ஸசெரீஸ், உடற்பாகம், ஹெல்மட் மற்றும் கூடுதல் அக்ஸசெரீஸ்களுக்கு 20 சதவீத தள்ளுபடி ஆகியவற்றை ராயல் என்பீல்டு வழங்க திட்டமிட்டுள்ளது.

தற்போது, பலர் எங்களது பகுதி சிவப்பு மண்டலமாக உள்ளது. அப்படியானால் இந்த சலுகை எங்களுக்குப் பொருந்துமா., என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். ஆம், நீங்களும் ஆன்லைன் மூலம் புக் செய்வதன்மூலம் ராயல் என்பீல்டின் அனைத்து சலுகைப் பலன்களையும் அனுபவிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு முடிவிற்கு வந்த பின் அதனை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி புதுமுக வாகனங்களின் மூலமும் ராயல் என்பீல்டு இந்தியர்களைக் கவர்ந்து வருகின்றது.

அந்தவகையில், விரைவில் புத்தம் புதிய மாடலான மீட்டியர் எனும் மோட்டார்சைக்கிளை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுமட்டுமின்றி, அதன் புகழ்வாய்ந்த மாடல்களான கிளாசிக் 350, புல்லட் 350, ஹிமாலயன், இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகியவற்றை பிஎஸ்-6 தரத்தில் களமிறக்கியுள்ளது.

இத்தோடு நில்லாமல் இந்திய இளைஞர்களை ஒட்டுமொத்தமாக வளைத்துப் போட்டுக் கொள்ளும் வகையில் மலிவு விலை மோட்டார்சைக்கிள்களைக் களமிறக்ககும் பணியிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இந்த மலிவு விலை பைக் பற்றிய தகவலை அந்நிறுவனம் கொரோனா பிரச்னைகளுக்கு முன்னதாகவே அறிவித்துவிட்டது.

எனவே, வரும் காலங்களில் அந்த பைக்கின் அறிமுகம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்தே, தற்போது கொரோனாவால் விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் ராயல் என்பீல்டு நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








