ஒரகடம் ஆலையில் உற்பத்திப் பணிகளை துவங்கியது ராயல் என்ஃபீல்டு
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஓரகடம் ஆலையில் உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, குறிப்பிட்ட பகுதிகளில் டீலர்கள் திறக்கப்பட்டு வர்த்தக நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்ததால், கடந்த மார்ச் 24ந் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், கார், பைக் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களும், அதன் டீலர்களும் மூடப்பட்டுள்ளன. வரும் 17ந் தேதி வரை தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, சென்னை அருகே ஓரகடத்தில் செயல்பட்டு வரும் ஆலையில் உற்பத்திப் பணிகளை நேற்று முதல் துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் படிப்படியாக உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரகடம் ஆலையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பணியாளர்களை பணிக்கு திரும்ப அழைத்துள்ளது ராயல் என்ஃபீல்டு. மேலும், ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டவுடன் அனைத்து பணியாளர்களுடன் உற்பத்திப் பணிகளை சீரடைய செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆலையில் சமூக இடைவெளி விதிமுறைகளையும், தூய்மை பணிகளையும் கடைபிடித்து உற்பத்திப் பணிகளை துவங்கி இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அடுத்த கட்டமாக, சென்னை திருவொற்றியூர் மற்றும் வல்லம் வடகல் பகுதிகளில் உள்ள ஆலைகளிலும் உற்பத்திப் பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளது.

மேலும், சென்னை, குர்கான் நகரங்களில் இயங்கி வரும் கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள தொழில்நுட்ப மையம் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். இந்த அலுவலகப் பணியாளர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனனர்.

இதனிடையே, கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் செயல்படும் 120 டீலர்கள் திறக்கப்பட்டு விற்பனை பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இந்த மாத மத்தியில் 300 ஷோரூம்கள் வரை செயல்பட துவங்கும். கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளுடன் திறக்கப்பட்ட ஷோரூம்களில் வர்த்தகப் பணிகள் நடைபெறும்.


Click it and Unblock the Notifications








