கவரும் கருப்பு வண்ணத் தேர்வில் ஸ்பெஷல் டிரையம்ஃப் போனிவில் பைக்குகள் அறிமுகம்!
கவர்ச்சிகரமான கருப்பு வண்ணத்துடன் புதிய டிரையம்ஃப் போனிவில் டி100 மற்றும் டி120 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கூடிய டிரையம்ஃப் போனிவில் குடும்பத்தில் டி100 மற்றும் டி120 பைக்குகள் வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடல்களாக உள்ளன. இந்த நிலையில், இந்த இரண்டு பைக்குகளின் சிறப்பு பதிப்பு மாடலானது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டிரையம்ஃப் போனிவில் டி100 மற்றும் டி120 பைக்குகளின் இந்த சிறப்பு பதிப்பு மாடலானது பிளாக் எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல் முழுமையாக கருப்பு வண்ண பூச்சுடன் இந்த சிறப்பு பதிப்பு மாடலானது விற்பனைக்கு கிடைக்கும்.

பைக்கின் அனைத்து பகுதிகளிலும் கருப்பு வண்ணப்பூச்சுடன் தனித்துவமாக தெரிகிறது. ரியர் வியூ மிரர்கள், ஹெட்லைட் டர்ன் இண்டிகேட்டர்கள், எஞ்சின், சக்கரங்கள், பாடி பேனல்கள் என அனைத்துமே கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டி100 பைக்கில் க்ளாஸ் பிளாக் மற்றும் மேட் பிளாக் என இரண்டு கருப்பு வண்ணத் தேர்வுகள் கொடுக்கப்படுகிறது. டி120 பைக்கில் மேட் கிராஃபைட் ஃபினிஷ் செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது.

இந்த விசேஷ வண்ணப்பூச்சுதான் இந்த சிறப்பு பதிப்பு மாடலின் முக்கிய அம்சமாக உள்ளது. வேறு எந்த மாற்றமும் இல்லை. சாதாரண டி100 மற்றும் டி120 பைக்குகளில் இடம்பெற்றிருக்கும் அதே சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள்தான் உள்ளன.

போனிவில் டி100 பிளாக் எடிசனில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 900சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

போனிவில் டி120 பிளாக் எடிசனில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்பு கொண்ட 1,200 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 79 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டு பைக்குகளிலும் எல்இடி ஹெட்லைட்டுகள், ரைடு பை ஒயர் சிஸ்டம், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், டிரைவிங் மோடுகள், பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையிலான இரட்டை டயல்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எஞ்சின் இம்மொபைலைசர் உள்ளிட்ட சிறப்பமச்ங்கள் இடம்பெற்றுள்ளன.

டிரையம்ஃப் டி100 பிளாக் எடிசன் மாடலுக்கு ரூ.8.87 லட்சமும், டி120 பிளாக் எடிசன் மாடலுக்கு ரூ.9.97 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிரையம்ஃப் நிறுவனத்தின் போனிவில் குடும்பத்தில் இந்த இரண்டு புதிய சிறப்பு பதிப்பு பைக் மாடல்களும் தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications








