சென்னையில், ட்ரையம்ஃப் சூப்பர் பைக்குகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு!
சென்னையில் ட்ரையம்ஃப் பிரிமீயம் பைக்குகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனம் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தகத்தை நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டு செல்லும் வகையில், புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது.

அந்த வகையில், நாட்டின் மிக முக்கிய பெரு நகரங்களில் ஒன்றாக இருந்து வரும் சென்னையில் ட்ரையம்ஃப் பைக்குகளுக்கான பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக நியமிக்கப்பட்டுள்ள கிவ்ராஜ் மோட்டார் நிறுவனம் இந்த ஷோரூமை திறந்துள்ளது.

சென்னை, க்ரீம்ஸ் சாலையில் இந்த புதிய ட்ரையம்ஃப் பைக் ஷோரூம் அமைந்துள்ளது. இந்த புதிய பைக் ஷோரூம் 5,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

பைக் விற்பனை, சர்வீஸ் ஆகிய சேவைகளை வழங்கும் ஒருங்கிணைந்த கட்டமைப்புடன் இந்த ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. பார்வைக்காக பைக்குகளை நிறுத்துவதற்கான போதிய இடவசதி, ஆக்சஸெரீகள் விற்பனை, கஸ்டமைஸ் செய்வதற்கான பகுதி, வாடிக்கையாளர்களுக்கான ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நவீன கட்டமைப்பு வசதி கொண்ட ட்ரையம்ஃப் பைக் ஷோரூமாக அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, ட்ரையம்ஃப் நிறுவனத்தின் மெர்ச்சன்டைஸ் எனப்படும் விசேஷ அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பும் இந்த ஷோரூமில் உள்ளது.

இந்த புதிய ஷோரூம் திறப்பு குறித்து ட்ரையம்ஃப் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் ஷோயிப் ஃபாரூக் கூறுகையில்,"எங்களது வர்த்தகத்தில் சென்னையை மிக முக்கியமானதாக கருதுகிறோம். இந்தியாவில் 75 சதவீத விற்பனை தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு மாநிலங்களில் இருந்துதான் வருகிறது.

கிவ்ராஜ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாகவும், அதிக நம்பிக்கையை தருவதாக இருக்கும் என்று நம்புகிறோம். கிவ்ராஜ் ட்ரையம்ஃப் என்ற பெயரில் திறக்கப்பட்டு இருக்கும் இந்த ஷோரூம் நாட்டிலேயே மிகவும் பிரிமீயமான ட்ரையம்ஃப் ஷோரூம்களில் ஒன்றாக இருக்கும். இன்று முதல் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்," என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் ட்ரையம்ஃப் ஷோரூம் திறப்பு விழாவையொட்டி, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பைக்குகளை டெலிவிரி கொடுக்கும் பணிகளும் இனிதே துவங்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு ராக்கெட் 3ஆர் பைக் மாடல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த 14 ஷோரூம்கள் மூலமாக 13 மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் இந்தியாவில் ட்ரையம்ஃப் நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








