டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முக்கிய அம்சங்கள், விலை விபங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி வரிசை பைக்குகள் இந்திய இளைஞர்கள் மத்தியில் சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன. அப்பாச்சி குடும்பத்தில் 160சிசி, 180சிசி மற்றும் 200சிசி, 310சிசி மாடல்கள் விற்பனையில் உள்ளன. இந்த நிலையில், 160சிசி, 200சிசி மற்றும் 310சிசி மாடல்கள் பிஎஸ்6 எஞ்சினுடன் வந்துவிட்டன.

தற்போது அப்பாச்சி 180சிசி மாடலானது பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. டிரம் பிரேக் மாடலுக்கு ரூ.1.01 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், டிஸ்க் பிரேக் மாடலுக்கு ரூ.1.04 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 மாடலைவிட ரூ.6,700 கூடுதல் விலையில் இந்த மாடல் வந்துள்ளது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் புதிய வண்ணத் தேர்வுகள், மேம்பட்ட இருக்கைகள், வெள்ளை வண்ண பின்புல ஒளி வழங்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புதிய கிராஷ் கார்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 180 மாடலில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட 177.4சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16.6 எச்பி பவரையும், 15.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த பைக்கில் பெரிய அளவில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த பைக்கில் முன்புறத்தில் 270மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 200 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

மேலும், டபுள் கிராடில் ஃப்ரேம், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக் மாடலாக தொடர்ந்து தக்க வைக்கும். இந்த பைக் சுஸுகி ஜிக்ஸெர் மற்றும் யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








