அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் அடிப்படையில் அட்வென்ச்சர் மாடலை களமிறக்குகிறது டிவிஎஸ்!
இளைஞர்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் அடிப்படையில் புதிய அட்வென்ச்சர் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனமும் இணைந்து பட்ஜெட் விலையிலான பிரிமீயம் பைக் தயாரிப்பில் இறங்கி இருக்கின்றன. இந்த கூட்டணியில் மூன்று பைக்குகள் இதுவரை உருவாக்கப்பட்டு விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன.

இதில், பிஎம்டபிள்யூ பிராண்டில் ஜி 310ஆர் என்ற நேக்கட் ரக பைக் மாடலும், ஜி 310 ஜிஎஸ் என்ற அட்வென்ச்சர் பைக் மாடலும் விற்பனையில் உள்ளன. டிவிஎஸ் பிராண்டில் அப்பாச்சி ஆர்ஆர் 310 என்ற பைக் மாடல் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டணியின் கீழ் டிவிஎஸ் பிராண்டில் புத்தம் புதிய மற்றொரு பைக் மாடல் வர இருக்கிறது.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் அடிப்படையில் இந்த புதிய பைக் மாடல் உருவாக்கப்பட இருக்கிறது. ஆனால், இந்த பைக் சாகசப் பயணங்களுக்கு ஏற்ற அட்வென்ச்சர் ரக மாடலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அடுத்த ஆண்டு இந்த புதிய அட்வென்ச்சர் பைக் மாடலை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கைவிட சற்றே விலை கூடுதலாக நிர்ணயிக்கப்படலாம்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு நேர் எதிராகவும், கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் மார்க்கெட்டை விலை அடிப்படையில் குறிவைத்தும் இந்த புதிய பைக் மாடல் நிலைநிறுத்தப்படும்.

ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில் இந்த புதிய பைக்கின் உற்பத்தி பணிகள் நடக்கும். இது டிவிஎஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும் என்பதால் இளைஞர்கள் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் பட்ஜெட் விலையிலான பிரிமீயம் பைக் மாடல்களை உருவாக்குவதற்காக கூட்டணி அமைத்தன.

இந்த கூட்டணியில் உருவான பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரு பைக் மாடல்களையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கியது. இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளின் அடிப்படையிலான அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் மாடலானது டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கியது.

இந்த மூன்று பைக்குளின் உற்பத்திப் பணிகளையும் டிவிஎஸ் மோட்டார்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குளும் உலக அளவில் 90 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Source: Moneycontrol


Click it and Unblock the Notifications








