பிஎம்டபிள்யூ கூட்டணியில் அடுத்து ஒரு புதிய பைக்... டிவிஎஸ் ஆயத்தம்!
பிஎம்டபிள்யூ கூட்டணியில் அடுத்து ஒரு புதிய பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் களமிறக்க உள்ளது. இந்த புதிய பைக் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிரிமீயம் வகை பைக் சந்தையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தும் செயல்பட்டு வருகிறது.

இந்த கூட்டணியில் மூன்று பைக் மாடல்கள் உருவாக்கப்பட்டு விற்பனையில் உள்ளன. பிஎம்டபிள்யூ பிராண்டில் ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் பைக் மாடல்களும், டிவிஎஸ் பிராண்டில் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் மாடலும் விற்பனையில் உள்ளன.

இதில், ஜி 310 ட்வின்ஸ் பைக் மாடல்கள்தான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலை குறைவான மாடல்களாக உள்ளன. அதேபோன்று, அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் மாடல்தான் டிவிஎஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த, பிரிமீயம் மாடலாக உள்ளது.

இந்த பைக்குகளின் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பணிகளை பிஎம்டபிள்யூ மேற்கொண்டது. உற்பத்திப் பணிகளை டிவிஎஸ் மோட்டார் கையாள்கிறது. ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையில்தான் இந்த பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், டிவிஎஸ் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் அடுத்து ஒரு புதிய மாடல் உருவாக்கப்படுவது குறித்த தகவல் இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளம் செய்தி மூலமாக மீண்டும் உறுதியாகி இருக்கிறது. இந்த பைக் மாடலானது டிவிஎஸ் பிராண்டில் வர இருக்கிறது. மேலும், மிட் வெயிட் எனப்படும் நடுத்தர வகையாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது வெளியாகி உள்ள செய்தியின்படி, இந்த பைக் மாடலானது பிஎம்டபிள்யூ ஜி 310 ட்வின்ஸ் மற்றும் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஆகிய பைக்குளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

அதாவது, அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் மாடலானது பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் போன்று நேக்கட் அல்லது ஜி 310ஜிஎஸ் போன்று அட்வென்ச்சர் வகை மாடலாக இருக்கும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே அட்வென்ச்சர் வகை மாடல் என்ற தகவலும் வெளியானது. மேலும், நேக்கட் வகை மாடலில் வந்தாலும், அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலமாக, கேடிஎம் ட்யூக் பைக் மார்க்கெட்டை டிவிஎஸ் குறி வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அடுத்த ஆண்டு இந்த புதிய பைக் மாடலை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த பைக் மாடல் மிக சரியான விலையில் வரும் என்பதால், இப்போதே ஆர்வம் கொப்பளிக்கிறது.

இதனிடையே, இங்கிலாந்தை சேர்ந்த நார்ட்டன் பைக் நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் அண்மையில் கைப்பற்றி உள்ளது. நார்ட்டன் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதிய பைக்குகளை டிவிஎஸ் உருவாக்கும் வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், அதற்கு சில ஆண்டு காலம் பிடிக்கும். தற்போதைக்கு பிஎம்டபிள்யூ துணையுடன் ஆரம்ப ரக பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் வலுவான வர்த்தகத்தை பெறுவதற்கான முயற்சிகளில் டிவிஎஸ் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








