முழு சார்ஜில் 100 கிமீ பயணம்... வெஸ்பாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!
வெஸ்பா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியாவில் பிரிமீயம் ரக ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசை கட்ட துவங்கி இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் தனது மார்க்கெட்டை வலுப்படுத்தும் நோக்கில் புதிய மின்சார ஸ்கூட்டர் மாடலை அறிமுகப்படுத்துவது குறித்து வெஸ்பா நிறுவனம் தீவிர பரிசீலனை செய்து வருகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதை ஆய்வு செய்யும் விதமாக, ஆட்டோ எக்ஸ்போவில் தனது எலட்ரிக்கா என்ற மின்சார ஸ்கூட்டரை பார்வைக்கு நிறுத்தி வைத்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ வரும் பார்வையாளர்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்த்து முடிவு செய்வதற்கும் வெஸ்பா திட்டமிட்டுள்ளது. அதிக வரவேற்பு இருந்தால் கூடிய விரைவில் இந்த ஸ்கூட்டரை கொண்டு வருவதற்கான திட்டங்களை கையில் எடுக்கும்.

பொதுவாகவே பிரிமீயம் வகை மாடல்களாக வெஸ்பா ஸ்கூட்டர்கள் உள்ளன. அந்த வகையில், இதன் செயல்திறனும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும், வெஸ்பா எலட்ரிக்கா மின்சார ஸ்கூட்டரில் 4.2kWh லித்தியம் அயான் பேட்டரி உள்ளது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணிநேரம் பிடிக்கும். இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 6 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கான இணணயான சிறப்பம்சங்களை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உடனடியாக விற்பனைக்கு வந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்த ஸ்கூட்டர் மூலமாக தனது எதிர்கால எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டங்களை வகுத்து செயலாற்றுவதற்கான வாய்ப்பாக வெஸ்பா நிறுவனம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








