2 புதிய வெஸ்பா ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!
பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மாசு உமிழ்வு குறைவான எஞ்சின்களுடன் இரண்டு புதிய வெஸ்பா ஸ்கூட்டர்கள் இன்று விற்பனைக்கு வரப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் பிரிமீயம் ரக மாடல்களாக வெஸ்பா ஸ்கூட்டர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பாரம்பரியம் மிக்க வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக புதிய ஸ்கூட்டர் மாடல்களை வெஸ்பா அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டர்கள் வெஸ்பா விஎக்ஸ்எல் 149 மற்றும் எஸ்எக்ஸ்எல் 149 ஆகிய பெயர்களில் பிஎஸ்6 எஞ்சினுடன் வந்துள்ளன. ஏற்கனவே விற்பனையில் இருந்த வெஸ்பா விஎக்ஸ்எல் 150 மற்றும் எஸ்எக்ஸ்எல் 150 ஆகிய மாடல்களுக்கு மாற்றாக இந்த இரண்டு புதிய மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு ஸ்கூட்டர் மாடல்களிலும் 149 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய இந்த எஞ்சின் 10.32 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 3 கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர்களுடன் மாசு உமிழ்வு வெகுவாக குறைக்கப்படும் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது.

இதுவரையில் இருந்த வெஸ்பா விஎக்ஸ்எல் 150 மற்றும் எஸ்எக்ஸ்எல் 150 ஸ்கூட்டர்களிலிருந்து சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்புற அப்ரான் பகுதியில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செவ்வக வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சைடு மிரர்களின் டிசைனிலும் மாற்றம் கண்டுள்ளது.

இரண்டு ஸ்கூட்டர் மாடல்களிலும் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 200 மிமீ வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 140 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. பின்சக்கரத்தில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

மோனோகாக் ஃபுல் ஸ்டீல் பாடி கட்டமைப்பு, சிங்கிள் சைடு ஆர்ம் கொண்ட முன்புற சஸ்பென்ஷன், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பரிமாணத்தில் முந்தைய மாடல்களின் அளவுகளிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 எஞ்சினுடன் வந்துள்ள புதிய வெஸ்பா விஎக்ஸ்எல் 149 ஸ்கூட்டருக்கு ரூ.1,22,664 எக்ஸ்ஷோரூம் விலையும், எஸ்எக்ஸ்எல் 149 ஸ்கூட்டருக்கு ரூ.1,26,650 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர்கள் மிகவும் பிரிமீயம் மாடல்களாக விற்பனைக்கு வந்துள்ளன. இதன் எஞ்சின் 150 சிசி.,யிலிருந்து 149 சிசி.,யாக குறைக்கப்பட்டு இருப்பதற்கு, காப்பீட்டு கட்டணம் சற்றே குறையும் என்ற காரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








