டீனேஜர்ஸின் ஃபேவரட் ஹோண்டா டியோ, 2021 வெர்சனில் ஜப்பானில் அறிமுகம்! இந்த விலையில் கேடிஎம் பைக்கையே வாங்கிடலாம்
இந்தியாவில் இளைஞர்களின் ஃபேவரட் ஸ்கூட்டர் மாடலாக உள்ள ஹோண்டா டியோவின் 2021 வெர்சன் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2021 டியோவில் எதாவது அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டியோ ஸ்கூட்டர் இந்தியாவில், குறிப்பாக தமிழக இளம் தலைமுறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் ஹோண்டா தயாரிப்பாக உள்ளது. இதனால் இவற்றின் தோற்றத்தை பெரும்பாலானோர்களால் சாலையில் எளிதில் அடையாளம் கண்டுப்பிடித்துவிட முடியும்.

ஆனால் நமது நாட்டில் விற்பனையில் இருக்கும் டியோவை காட்டிலும் தற்போது ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2021 டியோ சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அதிலும் ஹெட்லைட் இங்குள்ள டியோவில் ஒரே பகுதியாக வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த ஜப்பான் மாடலில் இரு துண்டுகளாக வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் டியோ ஸ்கூட்டர்களுக்கே உண்டான அந்த ஸ்போர்டினஸ் இதில் அப்படியே உள்ளது. இன்னும் சொல்லப்போனால் 2021 டியோவில் இன்னும் மெருக்கேறியுள்ளது.

இந்த 2021 ஸ்கூட்டரில் முக்கிய தொழிற்நுட்ப அம்சங்களாக இம்பொளிசர், ஸ்கூட்டரின் வேகம், எரிபொருள் அளவு, தூரம் மற்றும் மற்ற அடிப்படை தகவல்களை வழங்கும் கன்சோல் உள்ளிட்டவை உள்ளன. முன்பக்கத்தில் அரை லிட்டர் பாட்டில் வைக்கும் அளவிற்கு பாட்டில் ஹோல்டர் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் இருக்கை அடியிலும் ஒரு முழு ஹெல்மெட்டை வைக்கும் அளவிற்கு 18 லிட்டர் கொள்ளளவில் சேமிப்பிடம் உள்ளது. 2021 ஹோண்டா டியோவில் வழங்கப்பட்டுள்ள ஏர்-கூல்டு, 110சிசி என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 8.7 பிஎஸ் மற்றும் 9 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

ஸ்கூட்டரை நிறுத்த முன் சக்கரத்தில் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ட்ரம்-மும் ப்ரேக் அமைப்புகளாக வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் பணியினை கவனிக்க முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஒற்றை ஷாக்கும் உள்ளன.

மாட் ஸ்டாரி ப்ளூ மெட்டாலிக், மாட் கேலக்ஸி பிளாக் மெட்டாலிக், முத்து & மல்லிகை வெள்ளை மற்றும் சில்வர் மெட்டாலிக் என்ற நான்கு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ள 2021 ஹோண்டா டியோவின் விலை ஜப்பானில் 2,20,00 ஜப்பானிய யென் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.1.5 லட்சத்தை தாண்டி செல்கிறது. இவ்வாறு அதிகப்படியான விலை நிர்ணயிக்கப்பட வேண்டி இருப்பதால் 2021 டியோவை ஹோண்டா டூவீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய வாய்ப்பு குறைவே.


Click it and Unblock the Notifications








