புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக் வெளியீடு... முன்பதிவு விரைவில் தொடக்கம்... விலை உயருமா? குறையுமா?
புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கவாஸாகி இந்தியா நிறுவனம் 2021 நின்ஜா 300 மோட்டார்சைக்கிளை தற்போது வெளியிட்டுள்ளது. புதிய நின்ஜா 300 பைக்கின் புகைப்படங்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் எந்தவிதமான அப்பேட்களும் செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கவாஸாகி இந்தியா நிறுவனம் புதிய நின்ஜா 300 பைக்கின் விலையை வெகு விரைவில் அறிவித்து, முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களை உள்ளடக்கிய புதிய வண்ண தேர்வை 2021 கவாஸாகி நின்ஜா 300 பெற்றுள்ளதை தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலம் அறிய முடிகிறது.

அத்துடன் பைக் முழுவதும் ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ள சிகப்பு வண்ண அலங்கார ஸ்டிக்கர்களும் கூடுதல் கவர்ச்சியை சேர்க்கின்றன. மற்றபடி கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் டிசைன் அம்சங்கள் அப்படியேதான் உள்ளன. ஆனால் இந்த பைக்கின் தொழில்நுட்ப விபரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கில், மேம்படுத்தப்பட்ட 296 சிசி லிக்யூட்-கூல்டு 4-ஸ்ட்ரோக் பேரலல்-ட்வின் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இந்த இன்ஜின் இருக்கும். அதேபோல் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனும் தொடர்ந்து வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 11,000 ஆர்பிஎம்மில் 39 பிஎஸ் பவரையும், 10,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் முந்தைய மாடல் 2.98 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் புதிய மாடலின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. விலை உயரலாம் என சில தகவல்கள் வெளியாகி வரும் அதே நேரத்தில், விலை குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதே சமயம் புதிய நின்ஜா 300 பைக்கிற்கான முன்பதிவுகள் வெகு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் விபரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய சந்தையில் 2 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்குவதற்கு கவாஸாகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், புதிய நின்ஜா 300 ஒன்றாகும். இரண்டாவது பைக்கை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்கவில்லை. அந்த பைக்கை பற்றிய தகவல்களும் கூடிய விரைவில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








