பெட்ரோல் விலை உயர்வால் இந்த பக்கம் வரும் வாகன ஓட்டிகள்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சூடு பிடிக்குது!
பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து, வாகன ஓட்டிகளுக்கு மிக கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு பிரச்னை காரணமாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் 2 முன்னணி நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகியவைதான் அந்த இரண்டு நிறுவனங்கள். பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனை செய்து வருகின்றன.

இதுதவிர ஏத்தர் எனர்ஜி போன்ற பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து கொண்டுதான் உள்ளன. ஆனால் பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும்தான் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களாக பார்க்கப்படுகின்றன. எனவே பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கையை இந்த செய்தியில் அலசுவோம்.

பஜாஜ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 452 சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த மே மாதம் வெறும் 31 ஆக இருந்தது. அதே நேரத்தில் டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 639 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த மே மாதம் பூஜ்ஜியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது கடந்த மே மாதம் டிவிஎஸ் நிறுவனம் ஒரு ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கூட விற்பனை செய்யவில்லை. பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து கடந்த ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 1091 சேத்தக் மற்றும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளன.

இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையும் ஆயிரத்தை கடப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், வரும் காலங்களில் பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2 முக்கியமான ஸ்கூட்டர்கள் தவிர மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்னரே பலர் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து கொண்டுள்ளனர். முன்பதிவு தொகை குறைவு என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றாலும் கூட, இதை எல்லாம் வைத்து பார்க்கையில், இந்தியாவில் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








