பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையே தாங்க முடியல... இதுல இது வேறயா... மக்கள் புலம்பல்
இந்தியாவில் பெனெல்லி பைக்குகளின் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெனெல்லி இந்தியா நிறுவனம் தனது லியோன்சினோ, டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் இந்த மாடல்களும் இந்தியாவில் பிரபலமாக உள்ள பெனெல்லி நிறுவனத்தின் மாடல்கள் ஆகும். லியோன்சினோ 500 பைக்கின் விலை தற்போது 4,69,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ஸ்டீல் கிரே மற்றும் லியோன்சினோ ரெட் என இரண்டு வண்ண தேர்வுகள் கிடைக்கின்றன. இதில், ஸ்டீல் கிரே லியோன்சினோ 500 பைக்கின் விலை 4,69,900 ஆகவும், லியோன்சினோ ரெட் பைக்கின் விலை 4,79,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டிஆர்கே 502 டார்க் கிரே மாடலின் விலை 4,79,900 ரூபாயில் இருந்து 4,85,900 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதில், ப்யூர் ஒயிட் மற்றும் பெனெல்லி ரெட் மாடல்களின் விலை 4,95,900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த மாடல்களின் விலை 4,89,900 ரூபாய் ஆகும். அதே நேரத்தில் பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் பைக், டார்க் கிரே மற்றும் ப்யூர் ஒயிட் & ரெட் ஆகிய வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. இதற்கு முன்பு டார்க் கிரே பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் பைக்கின் விலை 5,19,900 ரூபாயாக இருந்தது.

தற்போது இது 5,25,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ப்யூர் ஒயிட் & ரெட் மாடலின் விலை முன்பு 5,29,900 ரூபாயாக இருந்தது. இது தற்போது 5,35,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெனெல்லி மட்டுமல்லாது இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான முன்னணி வாகன நிறுவனங்கள் தற்போது விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.

இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி ஒன்று. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதவிர உலகின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது.

இதன்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விலை வரும் ஜூலை 1ம் தேதி முதல் 3,000 ரூபாய் வரை உயரவுள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாகவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது மாடல்களின் விலையை உயர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் வாகனங்களின் விலையும் உயர்ந்து வருவது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதன் காரணமாக இந்தியாவில் வாகனங்களின் விற்பனை குறையுமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை ஏற்பட்ட சமயத்தில் இந்தியாவில் வாகனங்களின் விற்பனை குறைந்தது. ஆனால் அதன்பின் வந்த பண்டிகை காலத்தில் வாகனங்களின் விற்பனை பெருமளவில் அதிகரித்தது. இதேபோல் நடப்பாண்டு பண்டிகை காலத்திலும் விற்பனை உயரும் என வாகன நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








