இந்தியாவிற்கான பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 650ஜிடி பைக் தயார்!! அறிமுகம் எப்போது?
சிஎஃப் மோட்டோ 650ஜிடி பைக்கின் புதிய டீசர் படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ பிராண்டில் இருந்து பிஎஸ்6-க்கு இணக்கமானதாக 650ஜிடி பைக் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் தான் தற்போது இந்த மிடில்வெய்ட் ஸ்போர்ட்ஸ் பைக்கின் டீசர் படம் புதியதாக நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலமாக இந்த சிஎஃப் மோட்டோ பைக் எத்தகைய தோற்றத்தில் இருக்கும் என்பதில் நமக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது.

முந்தைய தலைமுறையில் இருந்து பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 650ஜிடி பைக் தோற்றத்தில் பெரிய அளவில் எந்த வேறுப்பாட்டையும் பெறவில்லை. இதனால் இந்த பிஎஸ்6 மாடலும் வழக்கம்போல் பெட்ரோல் டேங்கை சுற்றிலும் பேனல்களால் நிரப்பப்பட்டதாகவே உள்ளது.

சிஎஃப் மோட்டோ 650ஜிடி பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க கண்ணாடி, யுஎஸ்பி சார்ஜ் துளை, 12 வோல்ட் சாக்கெட், முழு-எல்இடி விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பிளவுப்பட்ட வடிவத்தில் இருக்கை அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

சஸ்பென்ஷன் பணிக்கு முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் சமச்சீரற்ற முறையில் பொருத்தப்பட்ட மோனோ-ஷாக்கும் வழங்கப்படவுள்ளது. பைக்கை நிறுத்த முன்சக்கரத்தில் இரட்டை ரோட்டார்களும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்கும் பொருத்தப்படவுள்ளது.

கான்செப்ட் நீலம் மற்றும் நெபுலா கருப்பு என்ற இரு விதமான நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ள பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 650ஜிடி பைக் 649.3சிசி, இரட்டை-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜினை பெற்று வரவுள்ளது.

முந்தைய பிஎஸ்4 வெர்சன் வெளிப்படுத்தும் ஆற்றலில் இருந்து இந்த பிஎஸ்6 வெர்சன் வெளிப்படுத்தும் ஆற்றலில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இருக்க வாய்ப்பில்லை. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

சிஎஃப் மோட்டோ நிறுவனம் சமீபத்தில் தான் இந்திய சந்தைக்கான அதன் 300என்கே பைக்கின் விலையை அறிவித்திருந்தது. 300என்கே பிஎஸ்6 பைக்கின் விலையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. இதனால் இதே பாணியில் பிஎஸ்4 650ஜிடி பைக்கின் அதன் விலையில் தான் பிஎஸ்6 மாடலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








