கொரோனா வைரஸ் இரண்டாவது அலை... ஹோண்டா டூவீலர் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது ஆலைகளில் டூவீலர் உற்பத்தியை நிறுத்தவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவை தீவிரமாக தாக்கி வரும் நிலையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது ஆலைகளில் இரு சக்கர வாகன உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஹோண்டா டூவீலர் நிறுவனம் இன்று (ஏப்ரல் 29) அறிவித்தது.

இதன்படி இந்தியாவில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் 4 ஆலைகளிலும், வரும் மே 1ம் தேதி முதல் இரு சக்கர வாகன உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த 4 ஆலைகளிலும் வரும் மே 15ம் தேதி வரை இரு சக்கர வாகன உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் ஹோண்டா டூவீலர் நிறுவனம் சுமார் 2 வாரங்களுக்கு உற்பத்தியை நிறுத்துகிறது.

ஹோண்டா நிறுவனத்திற்கு ஹரியானா மாநிலம் மனேசர், ராஜஸ்தான் மாநிலம் தபுகெரா, கர்நாடக மாநிலம் நரசிபுரா, குஜராத் மாநிலம் விதால்பூர் ஆகிய 4 இடங்களில் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் அனைத்திலும் மேற்கண்ட நாட்களில் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பணிகள் நிறுத்தப்படுகிறது.

ஹோண்டா டூவீலர் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது உற்பத்தி ஆலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். தற்போது தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்படவுள்ள காலத்தை பயன்படுத்தி கொண்டு, இந்த பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே செய்து விடுவதற்கும் ஹோண்டா டூவீலர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மே 15ம் தேதி வரை ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்படும் என்று மட்டுமே ஹோண்டா டூவீலர் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் மே 15ம் தேதிக்கு பிறகு இந்த முடிவு குறித்து ஹோண்டா டூவீலர் நிறுவனம் ஆய்வு செய்யும். அப்போது கொரோனா வைரஸ் பிரச்னை எப்படி உள்ளது? என்பதை பொறுத்து ஆலைகளில் மீண்டும் இரு சக்கர வாகன உற்பத்தி தொடங்கப்படும்.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்கும் விதமாக அலுவலக பணியாளர்கள் அனைவரையும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும்படி ஹோண்டா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா நிறுவனத்திற்கு முன்னதாக மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், உற்பத்தியை தற்காலிமாக நிறுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இதில், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. இதுதவிர எம்ஜி மோட்டார் நிறுவனமும், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள தனது கார் உற்பத்தி ஆலையை ஒரு வார காலத்திற்கு மூடுவது என அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

இதன்படி எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹலோல் ஆலை ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் ஆலைகளை தற்காலிமாக மூடி வருவதால், வாகன உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்களின் காத்திருப்பு காலம் உயரும் சூழல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








