டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் துவங்கியது!! ரூ.1 லட்சத்தில் முன்பதிவு செய்யலாம்
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

லக்சரி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டியில் இருந்து இந்திய சந்தையில் தற்சமயம் மிகவும் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளாக மல்டிஸ்ட்ராடா வி4 விளங்குகிறது.

ஏனெனில் பைக்கில் செயல்திறனிலும் சரி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் சரி டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 முன்னிலை வகிக்கிறது. இப்படிப்பட்ட பைக்கிற்கு தான் தற்போது இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

மல்டிஸ்ட்ராடா வி4 மட்டுமின்றி, அதனுடன் வி4 எஸ் மாடலுக்கும் முன்பதிவுகள் இன்று துவங்கப்பட்டுள்ளன. இவற்றை முன்பதிவு செய்வதற்கான முன் தொகையாக ரூ.1,00,000 பெறப்படுகிறது.

இந்த தொகையினை செலுத்தி வாடிக்கையாளர்கள் இந்த டுகாட்டி பைக்குகளை அருகில் உள்ள டீலர்ஷிப் மையங்களிலும் முன்பதிவு செய்யலாம். ஸ்டாக் உள்ளவரை இந்த மல்டிஸ்ட்ராடா பைக்குகள் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படவுள்ளன.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு டெலிவிரிகள் துவங்கப்படும். டெலிவிரி பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே பைக் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெஸ்ட் ட்ரைவ்கள் வழங்கப்பட உள்ளன.

மல்டிஸ்ட்ராடா வி4, உலகிலேயே முன் மற்றும் பின்பக்கத்தில் ரேடார் அமைப்புகளை பெற்ற முதல் தயாரிப்பு பைக்காகும். இதனால் சவுகரியத்துடன் மட்டுமில்லாமல் மிகுந்த பாதுகாப்பு உணர்வுடனும் இந்த தொலைத்தூர பயணங்களுக்கான அட்வென்ச்சர் பைக்கில் பயணிக்கலாம்.

அத்துடன் இந்த டுகாட்டி பைக்கின் முற்றிலும் புதிய வி4 கிராண்டூரிஸ்மோ என்ஜின் மூலமாக எந்தவொரு சாலையிலும், மென்யான பயணத்தையும், வலிமையான ஆற்றல் வெளியீட்டையும் பெற முடியும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 & வி4 எஸ் பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள 1,158சிசி, வி4 கிராண்டூரிஸ்மோ, லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-இல் 168 பிஎச்பி பவரையும், 8,750 ஆர்பிஎம்-இல் 125 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

சிறப்பம்சமாக 60 ஆயிரம் கிமீ வால்வு சேவை இடைவெளியை கொண்டுள்ள இந்த கிராண்டூரிஸ்மோ என்ஜினை பெற்றுவரவுள்ள இந்த டுகாட்டி அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை, வேரியண்ட்கள் மற்றும் தொழிற்நுட்பங்கள் உள்ளிட்டவை அனைத்தும் விரைவில் நடைபெறவுள்ள இதன் அறிமுகத்தின்போது வெளியிடப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








