போன மாசம் செம்ம சேல்... நாட்டிலேயே அதிகம் விற்பனை செஞ்சிட்டாங்களாம்... Hero Electric பெருமிதம்!
கடந்த செப்டம்பர் மாதத்தில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. நாட்டின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையிலேயே அதிகம் விற்பனையாகி இருப்பதாக நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த முழு விபரத்தையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக், கடந்த செப்டம்பர் மாதத்தில் தங்களின் தயாரிப்புகள் இதுவரை இல்லாத வகையில் அதிகளவில் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. 2021 செப்டம்பர் மாதத்தில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 6,500 யூனிட் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

இந்த உச்சபட்ச விற்பனை எண்ணிக்கையை அடுத்தே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், இத்தகைய அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இந்த நிலை, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

மின்சார வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பாவை, அதிக லாபத்தை வழங்கக் கூடியவை என்றெல்லாம் கூறப்படுகின்றது. ஆகையால், மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் முன்பைக் காட்டிலும் தற்போது சற்று அதிகமாக பிரபலமடையத் தொடங்கியுள்ளது.

இதற்கு மற்றுமொரு காரணமும் இருக்கின்றது. அண்மைக் காலங்களாக இந்தியாவில் எரிபொருளின் விலை விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்து வருகின்றது. இன்றைய (அக்டோபர் 6) நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ 100.49க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ. 95.93க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நாட்டின் வேறு சில மாநிலங்களில் ரூ. 110ஐ தொடுமளவிற்கு பெட்ரோல் விற்பனையாகி வருகின்றது. இந்த நிலையும் மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தியிருக்கின்றது என்று கூறலாம். இந்த நிலையிலேயே தங்கள் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகளவில் விற்பனையாகி இருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிவித்திருக்கின்றது.

நிறுவனத்தின் ஆப்டிமா (Optima) மற்றும் நைக்ஸ் (NYX) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையிரண்டும் உயர்-வேக திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களாகும்.

கடந்த காலங்களைக் காட்டிலும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து காணப்பட்டாலும், அது எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் விற்பனையைக் காட்டிலும் பல பல மடங்கு குறைவாகும். ஆம், இந்தியாவில் தற்போதும் பலர் மின் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததே முக்கிய காரணம் ஆகும்.

ஆம், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இருப்பதைப் போன்று அடிப்படை கட்டமைப்பு வசதி மின் வாகனங்களுக்கு இல்லாத நிலையே தென்படுகின்றது. இந்த நிலையை மாற்றும் முயற்சிகள் அரசுகள் தற்போது அதி-தீவிரம் காட்ட தொடங்கியிருக்கின்றன. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்த முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன.

நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் மற்றும் சிறிய ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரிகளை விநியோகம் செய்யும் மையங்களை திறக்கும் பணியில் அவை களமிறங்கியுள்ளன. இந்த முயற்சியில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனமும் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்காக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் மேஸிவ் மொபிலிட்டி (Massive Mobility) நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இரு நிறுவனங்களும் இணைந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சார்ஜிங் மையங்களைக் கட்டமைக்க இருக்கின்றன. அடுத்த ஓராண்டிற்குள் இப்பணியை இரு நிறுவனங்களும் தொடங்க இருக்கின்றன.

இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கரம் என அனைத்து ரக மின் வாகனங்களுக்கும் பயன்படுகின்ற வகையில் இந்த சார்ஜிங் மையங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. தற்போது வரை நாடு முழுவதும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 1,650 சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது. 2022ம் ஆண்டின் இறுதிக்குள் இதனை 20 ஆயிரம் எண்ணிக்கையில் உயர்த்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருக்கின்றது. மின் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை வளர்த்து, எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் ஈர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கையில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








