Hero Electric ஸ்கூட்டர்களை வாங்குவது இனி மிக சுலபம்... இதுக்காக வேறொரு நிறுவனத்துடன் கூட்டணியே வச்சுருக்காங்க!
Hero Electric நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்வதற்காக வேறொரு நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. அது எந்த நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியுள்ளது என்பது உள்ளிட்ட முக்கிய விபரங்களை இப்பிதிவில் பார்க்கலாம் வாங்க.

Hero Electric (ஹீரோ எலெக்ட்ரிக்) நிறுவனம் தனது மின்சார இருசக்கர வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புதிய கடன் திட்டங்களை நிறுவனம் நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது.

இதற்காக Wheels EMI (வீல்ஸ் இஎம்ஐ) எனும் நிறுவனத்துடன் ஹீரோ எலெக்ட்ரிக் கூட்டணியைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் வாயிலாகவே பல்வேறு சிறப்பு கடன் திட்டங்களை அது அறிவித்துள்ளது. சிறப்பு கடன் திட்டங்கள் மட்டுமின்றி சில சிறப்பு பலன்களையும் கூட்டணியின் வாயிலாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த சிறப்பு பலன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், கவர்ச்சிகரமான வட்டி விகிதம், சுலப மாத தவணை திட்டம் மற்றும் குறைந்த இஎம்ஐ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, மிக மிக வேகமான முறையில் கடனை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே ஆவண சரிபார்ப்பு மற்றும் இதர ஆய்வுகள் அனைத்தும் மிக வேகமாகவும், சுலபமாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், வாடிக்கையாளர்கள் எந்தவொரு சிக்கலுமின்றி உடனடியாக கடன் பெற முடியும் என தெரிகின்றது.

வீல்ஸ் இஎம்ஐ தற்போது நாட்டின் 13 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் தனது சேவையை மேற்கொண்டு வருகின்றது. இருசக்கர வாகன ஓவ்னர்ஷிப்-ரைடர்ஷிப் லைஃப் சைக்கிள், டிரைவிங் மொபிலிட்டி, ப்ரீ-ஓவ்ன்ட் இருசக்கர வாகனம், இன்சூரன்ஸ் மற்றும் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நிறுவனம் செய்து வருகின்றது.

இந்த நிலையிலேயே மின்சார இருசக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் வீல்ஸ் இஎம்ஐ கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. ஹீரோ எலெக்ட்ரிக் தற்போது மாதத்திற்கு 10 ஆயிரம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.

இதனை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே இந்த கூட்டணியை ஹீரோ எலெக்ட்ரிக் தொடங்கியிருக்கின்றது. இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மானியம், வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் மக்களை பன் மடங்கு கவரும் நோக்கில் சிறப்பு நடவடிக்கையில் ஹீரோ எலெக்ட்ரிக் களமிறங்கியிருக்கின்றது.

இந்தியாவில் அண்மைக் காலங்களாக பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மக்கள் பலர் தங்களின் பாக்கெட்டைக் (பணத்தைக்) காப்பாற்றிக் கொள்ளும் விதமாக மின் வாகனங்களின் பக்கம் சாய தொடங்கியிருக்கின்றனர். இவை நமது பணத்திற்கு மட்டுமல்ல சுற்றுச் சூழலுக்கும் மிக உகந்தது என கூறப்படுகின்றது.

இதனடிப்படையிலேயே இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பல மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடங்கி சிறப்பு சலுகைகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் மிக சமீபத்தில் அதன் ஊழியர்களுக்கு சிறப்பு திட்டத்தை நாட்டில் அறிமுகம் செய்தது. தனது ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினருக்கும் அதிக பலனை அளிக்கும் வகையில் அத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. 'ஹீரோ கேர்' (Hero Care) எனும் திட்டத்தின் வாயிலாகவே பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை நிறுவனம் அறிவித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்து.


Click it and Unblock the Notifications








