H-வடிவ எல்இடி ஹெட்லைட் உடன் அப்டேட் செய்யப்படும் ஹீரோ கிளாமர்!! விரைவில் அறிமுகமாகிறது
அப்டேட் செய்யப்பட்ட ஹீரோ கிளாமர் பைக்கின் புதிய டீசர் படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில் தான் கிளாமர் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இத்துடன் கிளாமர் மோட்டார்சைக்கிளை வலுப்படுத்தும் முயற்சியை ஹீரோ நிறுவனம் நிறுத்திக்கொள்ள போவதில்லை. ஏனெனில் அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் மோட்டார்சைக்கிள் தொடர்பான புதிய டீசர் படத்தினை வெளியிட்டுள்ளது.

அப்டேட் செய்யப்பட்டாலும், கிளாமர் எக்ஸ்டெக் பைக்கிற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கும். ஏனெனில் விற்பனையில் உள்ள ஹீரோ கிளாமருக்கு மாற்றாகவே இது கொண்டுவரப்படுகிறது. இந்த டீசரில் அப்டேட் செய்யப்பட்ட கிளாமரின் எல்இடி ஹெட்லைட் மட்டுமே காட்டப்பட்டுள்ளது.

H-வடிவில் உள்ள பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய இந்த எல்இடி விளக்குகள் பார்ப்பதற்கு மிகவும் கூர்மையானவைகளாக காட்சி தருகின்றன. மேலும் இந்த டீசர் படத்தில், இவற்றை ஆன் செய்யுங்கள் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இருந்து அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் பைக்கை களமிறக்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாராகி வருவதை அறிய முடிகிறது. ஹெட்லைட் அமைப்பு தான் மாற்றப்பட்டுள்ளதே தவிர்த்து டர்ன் இண்டிகேட்டர்கள் வழக்கமான ஹலோஜன் யூனிட்களாகவே உள்ளன.

இந்த H-வடிவ ஹெட்லைட் டீசர் படத்துடன் அப்டேட் செய்யப்பட்ட கிளாமரின் மேலும் ஒரு டீசரையும் ஹீரோ வெளியிட்டுள்ளது. இதில் பைக் நிழல் போல் காட்சியளித்தாலும், இந்த படத்தின் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் & இருக்கை அமைப்பை கிளாமர் பெற்றுவரவுள்ளதை பார்க்க முடிகிறது.

ஏற்கனவே கூறியதுதான், கிளாமர் எக்ஸ்டெக் உடன் ஒப்பிடுகையில், அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் சில விஷயங்களில் வேறுப்படும். குறிப்பாக எக்ஸ்டெக்கில் வழங்கப்படும் ப்ளூடூத் இணைப்பை புதிய கிளாமரில் எதிர்பார்க்க முடியாது.

இருப்பினும் தோற்றம் புத்துணர்ச்சியாக இருக்கும் என்பதால், எக்ஸ்டெக்-ஐ காட்டிலும் குறைந்த விலையில் கிளாமரை வாங்க விரும்புபவர்களுக்காக புதிய ஹீரோ கிளாமர் உருவாக்கப்படுகிறது. ஹீரோ கிளாமரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.74,900 ஆக உள்ளது.

இதனை காட்டிலும் அப்டேட் செய்யபட்ட கிளாமரின் விலை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000 வரையில் உயர்த்தப்படும். அதேநேரம் கிளாமர் எக்ஸ்டெக்கின் விலைகள் ரூ.78,900 (ட்ரம் ப்ரேக்) மற்றும் ரூ.83,500 (டிஸ்க் ப்ரேக்) உள்ளன. கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதால், புதிய கிளாமர் எப்போது வேண்டுமானாலும் சந்தையில் அறிமுகமாகலாம்.


Click it and Unblock the Notifications








