திடீரென பெரியளவில் குறைந்த ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! ஹீரோவின் மொத்த விற்பனை 3.28 லட்சமாக குறைந்தது!
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த 2021 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்துள்ள 2-வீலர்ஸ் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணிகளினால், கடந்த நவம்பர் மாதத்தில் பெரும்பான்மையான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை எதிர்பார்த்தப்படி இல்லை. இதில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மட்டும் என்ன விதிவிலக்கா! மற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களை போன்று ஹீரோ மோட்டோகார்பின் உள்நாட்டு விற்பனையும் கடந்த மாதத்தில் பெரிய அளவில் சரிந்துள்ளது.

கடந்த மாதத்தில் மொத்தமாக 3,28,817 இருசக்கர வாகனங்களை ஹீரோ நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை வருடம்-வருடம் ஒப்பிடுகையிலும் சரி, மாதம்-மாதம் ஒப்பிடுகையிலும் சரி பெரிய அளவில் குறைவாகும். ஏனெனில் 2020 நவம்பரிலும், 2021 அக்டோபரிலும் ஹீரோ மோட்டோகார்பின் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்திருந்தது.

அதிலும் குறிப்பாக, 2020 நவம்பர் மாதத்தில் மொத்தம் 5,75,917 இருசக்கர வாகனங்களை இந்த நிறுவனம் இந்தியாவில் விற்றிருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், கடந்த 2021 நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை சுமார் 42.91% குறைவாகும். அதேபோல் கடந்த அக்டோபரிலும் 37.69% அதிகமாக 5,27,723 யூனிட் ஹீரோ 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

வழக்கம்போல் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட ஹீரோ இருசக்கர வாகனமாக ஸ்பிளெண்டர் முதலிடத்தை தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,92,490 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் மாத விற்பனை இது கிடையாது. பெரும்பாலும் ஒவ்வொரு மாதத்திலும் 2 லட்ச யூனிட் ஸ்பிளெண்டர் பைக்குகள் எளிதாக விற்பனையாகும். சராசரியாக இந்தியாவில் 2.5 லட்ச ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையாகி வந்துள்ளன.

இதற்கு உதாரணமாக, ஹீரோ ஸ்பிளெண்டரின் 2021 நவம்பர் மாத (2,43,398) மற்றும் 2021 அக்டோபர் மாத (2,67,821) விற்பனை எண்ணிக்கைகளை சொல்லலாம். இந்த வகையில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் உள்நாட்டு விற்பனை முறையே 22.51% மற்றும் 28.13% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்திலும் வழக்கம்போல் எச்.எஃப் டீலக்ஸ் மாடலே தொடர்ந்துள்ளது.

2020 நவம்பரில் 1,79,426 யூனிட்களும், 2021 அக்டோபரில் 1,64,311 யூனிட்களும் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருந்த எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் கடந்த நவம்பர் மாதத்தில் 1 லட்சத்திற்கும் குறைவாக, 76,149 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் இதன் விற்பனை இருப்பதிலேயே அதிகப்பட்சமாக, கடந்த ஆண்டு நவம்பரை காட்டிலும் 57.56 சதவீதமும், கடந்த அக்டோபர் மாதத்தை காட்டிலும் 53.66 சதவீதமும் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.

மூன்றாவது இடத்தை ஹீரோ கிளாமர் பைக் 21,901 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் டபுள் மடங்காக, கிட்டத்தட்ட 40 ஆயிரம் கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக கிளாமரின் மாத விற்பனை எண்ணிக்கை 20 ஆயிரம் என்கிற அளவிலேயே உள்ளது.

கடந்த அக்டோபரிலும் 25,663 கிளாமர் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஹீரோ பேஷன் பைக்குகள் கடந்த மாதத்தில் 12,933 யூனிட்களின் விற்பனை உடன் இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அக்டோபர் மாத விற்பனை உடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனையில் பெரிய அளவில் குறை இல்லை என்றாலும், 2020 நவம்பரில் இதனை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக 53,768 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனையாகி இருந்தன.

இதுவரையில் உள்ளவை அனைத்தும் ஹீரோ மோட்டோகார்பின் பைக்குகளாகும். ஆறாவது இடத்தில் இருந்துதான் ஹீரோ ஸ்கூட்டர்கள் துவங்குவதை இந்த இடத்தில் கூறிக்கொள்கிறோம். இருப்பதிலேயே அதிகளவில் விற்பனையாகும் ஹீரோ ஸ்கூட்டரான பிளஷர் கடந்த நவம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் 11,136 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வருடம்-வருடம் மற்றும் மாதம்-மாதம் ஒப்பிடுகையில் பிளஷர் ஸ்கூட்டர்களின் விற்பனை பாதியாக குறைந்துள்ளதை அறிய முடிகிறது.

இதேபோல் இதற்கடுத்துள்ள மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்களின் விற்பனையும் கடந்த மாதத்தில் பாதியாக குறைந்திருக்க, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்கள் விற்பனையில் பெரிய அளவில் அடி வாங்கியுள்ளன. கடந்த நவம்பரில் 3,264 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள டெஸ்டினி125 ஸ்கூட்டர்கள் 2020 நவம்பரிலும், 2021 அக்டோபரிலும் ஏறக்குறைய 14 ஆயிரம் என்ற அளவில் விற்கப்பட்டிருந்தது.

இவற்றிற்கு அடுத்து 8வது மற்றும் 9வது இடங்களில் சற்று பிரீமியம் தரத்திலான ஹீரோ பைக்குகளான எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 உள்ளன. இவை இரண்டும் கடந்த நவம்பர் மாதத்தில் முறையே 3,251 யூனிட்கள் மற்றும் 2,303 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளின் விற்பனை கடந்த அக்டோபரை காட்டிலும் 39.63% குறைவு என்றாலும், 2020 நவம்பரை காட்டிலும் சுமார் 67.86% அதிகமாகும்.


Click it and Unblock the Notifications








